

ஷா ஆலம், ஏப். 19 – சிலாங்கூர் மாநில கார்னிவல் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தை இன்று மிகப்பெரிய அளவில் செலாயாங், டேவான் ஸ்ரீ சியாந்தான் மண்டபத்தில் நடைபெற்றது.
இவ்வாண்டிற்கான முதல் நிகழ்வாக விளங்கும் இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் ரெடிகேர், கார்ஸம், செங்ஹெங், 99 ஸீபீட்மார்ட், சப்வே உள்ளிட்ட நிறுவனங்கள் 4,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகின்றன என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு தெரிவித்தார்.
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் நேர்முகப் பேட்டி, வேலை வாய்ப்பு தொடர்பான ஆலோசகச் சேவை, அரசு துறைகளின் கண்காட்சி, ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை, இலவச மருத்துவ பரிசோதனை ஆகிய நிகழ்வுகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சிலாங்கூர் மாநிலத்தின் ஒன்பது மாவட்டங்களிலும் ஆண்டு இறுதிவரை நடைபெறவிருக்கும் சிலாங்கூர் ஜெலாஜா ஜோப்கேர் வேலை வாய்ப்புச் சந்தையில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் முன்னாள் கைதிகள் உட்பட 40,000 க்கும் மேற்பட்டோருக்கு வேலை வாய்ப்புகள் வழங்கப்படவதாக அவர் சொன்னார் .
இந்த வேலை வாய்ப்புச் சந்தையில் சேவை, உற்பத்தி, சந்தை, சுகாதாரம், சுற்றுலா, உபசரனை மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலை வாய்ப்பு வழங்கப்படுகிறது.
சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி சிறப்பு வருகை தந்து இந்த வேலை வாய்ப்பு சந்தையை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

