
புத்ராஜெயா, ஏப்ரல் 21 – இந்தியச் சமூக உருமாற்றப் பிரிவான மித்ராவின் PPSMI எனப்படும் 2025-ஆம் ஆண்டுக்கான மலேசிய இந்தியர்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதி, முதல் கட்டமாக 46 அமைப்புகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.
அதாவது மொத்தம் 40 மில்லியன் ரிங்கிட்டை அது உட்படுத்தியிருப்பதாக, மித்ரா தலைவர் பி.பிரபாகரன் கூறியுள்ளார்.
அந்நிதி வழங்கப்பட்ட திட்டங்களில் 840 குடும்பங்களைச் சேர்ந்த 4,500 குழந்தைகளுக்கு ஆரம்பக் கல்விக்கான Anak Pintar திட்டம் மற்றும் 2,000 சிறுநீரக நோயாளிகளுக்கு தலா 5,000 ரிங்கிட் மானியம் வழங்கும் 2025 மித்ரா டைலிசிஸ்’ திட்டமும் அடங்கும்.
எதிர்வரும் மே 2-ஆம் தேதி முதல் இவ்விரு திட்டங்களின் கீழ் உதவிப் பெற விண்ணப்பிக்க தொடங்கலாம்.
மலேசிய இந்தியர்கள் குறிப்பாக வசதி குறைந்த B40 மற்றும் நடுத்தர வர்கத்தினரான M40 குடும்பங்களின் சமூகப் பொருளாதார மேம்பாட்டுக்காக இந்த PPSMI நிதியை மித்ரா வழங்குகிறது.
எனவே, நிதி கிடைத்த அமைப்புகள் இந்தியச் சமூகத்திற்குப் பயன் தரக்கூடிய திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அதனை மித்ராவும் அணுக்கமாகக் கண்காணிக்கும் என பிரபாகரன் வலியுறுத்தினார்.