
தாப்பா ஏப்ரல் 25-
நாளை ஏப்ரல் 26 ஆயிர் கூனிங் ( Air Kuning) இல் நடக்கவிருக்கும் இடைத்தேர்தலில், மலேசிய சோசலிசக் கட்சி (PSM) சார்பாக களமிறங்கும் சகோதரி பவானிக்கு இந்திய சமூகம் ஒற்றுமையாக இருந்து தங்களின் முழு ஆதரவை வழங்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.
காரணம் , ஒரு நாட்டில் மக்களாட்சி நிலைத்திருப்பதற்கு அந்த நாட்டு மக்கள் அந்த ஆட்சிமுறை மீது கொண்டுள்ள நம்பிக்கைதான் முதன்மையாக அமையும்.
இன்றைய அரசாங்கத்தின் மீதும் இந்திய சமூகம் நம்பிக்கையை இழந்து கொண்டிருக்கிறார்கள் என்பதுதான் வெளிப்படையான உண்மை.
மலேசியாவில் 7% விழுக்காடு கொண்ட இந்திய சமூகத்தில் பொருளாதார, சமூக, அரசியல் துறைகளில் தீர்மானங்கள் எடுக்கும் இடங்களில் இந்தியர்கள் மிக மிக குறைவாகவே இருக்கின்றனர்.
அதை அதிகரிப்பதற்கான எந்த ஒரு முயற்சியும் இன்றுவரை மேற்கொள்ளவில்லை. இன்றைய ஒற்றுமை அரசாங்க ஆட்சியில் ஒரு தமிழ் பேசும் முழு அமைச்சர் கூட இடம் பெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.
இந்திய சமுகத்திக்கு கொடுக்கப்பட்ட உறுதிமொழிகளும் அறிவிப்புகளும் காகிதங்களிலேயே தேங்கி விடுகின்றன. ஆனால் தேர்தல நேரத்தில் இந்திய சமுகத்தின் வாக்கை தேடி அனைத்து கட்சிகளும் வருகின்றன.
நம்முடைய நாட்டில், பலர் தேர்தல் மட்டுமே ஜனநாயகம் என எண்ணி.தேர்தலை நோக்கியே தங்களது செயல்பாடுகளை செய்து வருவதோடு மக்களையும் அதற்கேற்றவாறு நம்பவைத்து தங்களது அரசியல் காயை நகர்த்தி வருகின்றனர்.
இன்றைய அரசியலில் பெரும்பாலும் தனக்கு பதவி வேண்டும் , கட்சிக்கு கணிசமான வாக்கை எடுத்து கொடுக்க வேண்டும் என்பதற்காக மட்டுமே கூட்டத்தை கூட்டுகின்றனர்.
என்னிடமும் ஓட்டுகள் இருக்கின்றன என்று சொல்வதை தவிர வேறு ஒன்றும் இல்லை. இந்திய சமுதாயம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும்,
நம் சமுதாயத்தில் ஏற்படும் ஓவ்வொரு சிக்கள்களிலிலும் நாம் படிப்பினையை கற்று கொள்ள வேண்டும். கற்றரிவை விட பட்டறிவு மேலானது. யாருக்காகவும் எதற்காகவும் சமரசம் செய்யாதீர்கள்.
என்னுடைய தன்மானம், என்னுடைய உரிமை, என்னுடைய மதிப்பு என்பது என் வாக்கில் இருக்கிறது என்று நாம் முதலில் உணர வேண்டும்.
ஜனநாயக ஆட்சியில் நமக்கு கிடைத்த மிகப்பெரிய அதிகாரம் ஓட்டுரிமை. அதை இந்திய சமுதாயம் முறையாக பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன் என்று பகாங் மாநில உரிமை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் கணேசன் தமது அறிக்கையில் கேட்டுக் கொண்டுள்ளார்

