
புத்ராஜெயா, ஏப். 28 – முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் சம்பந்தப்பட்ட வழக்கில் கூடுதல் ஆவணம் இருப்பதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய சட்டத் துறைத் தலைவருக்கு (ஏஜி) இங்குள்ள கூட்டரசு நீதிமன்றம் இன்று அனுமதி அளித்தது.
சட்டத் துறைத் தலைவர் எழுப்பிய முன்மொழியப்பட்ட கேள்விகள் 1964ஆம் ஆண்டு நீதித்துறை நீதிமன்றச் சட்டத்தின் (சிஜேஏ) 96வது பிரிவின் கீழ் அனுமதி வழங்குவதற்கான வரம்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக மலாயா தலைமை நீதிபதி டத்தோஸ்ரீ ஹஸ்னா முகமது ஹாஷிம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட குழு ஏகமனதாகக் கூறியது.
இந்த மேல்முறையீடு மீதான விசாரணையை ஜூலை 1 மற்றும் 2 ஆம் தேதிகளில் விசாரிக்க உச்ச நீதிமன்றம் தேதி நிர்ணயித்துள்ளது.
கூட்டரசு நீதிமன்ற நீதிபதிகள் டத்தோ ஜபரியா முகமட் யூசோப் மற்றும் டத்தோ ஹனிபா ஃபரிகுல்லா ஆகியோர் இந்த நீதிபதிகள் குழுவில் இடம் பெற்றிருந்தனர்.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மனுதாரர் என்ற முறையில் சட்டத் துறைத் தலைவர் விண்ணப்பத்தை தாக்கல் செய்திருந்தார். கூட்டரசு நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய மனுதாரர் அனுமதி பெற வேண்டும்.
ஆறு ஆண்டு சிறைத் தண்டனையின் எஞ்சிய காலத்தை வீட்டுக் காவலில்
அனுபவிக்க அனுமதிக்கும் கூடுதல் ஆவணம் இருப்பதாக நஜிப் கூறியதை மேல்முறையீட்டு நீதிமன்றம் கடந்த ஜனவரி 6ஆம் தேதி 2-1 என்ற பெரும்பான்மையில்
ஏற்று வழக்கை அதன் தகுதியின் அடிப்படையில் மறுபடியும் விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தது.
கூடுதல் ஆவணம் இருப்பதாகக் கூறப்படுவது தொடர்பாக நீதித்துறை சீராய்வு மனுவுக்கு அனுமதி கோரிய நஜிப்பின் விண்ணப்பத்தை நிராகரித்த உயர் நீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்பை மேல் முறையீட்டு நீதிமன்றத்தின் இந்த முடிவு ரத்து செய்தது.
bernama