
பாலஸ்தீனத்தில் இஸ்ரேல் நிகழ்த்தும் கொடூர தாக்குதல்களுக்கும், அப்பாவி மக்கள் படுகொலைக்கும் எதிராக மலேசியாவும், மாலைத்தீவும் ஒருமித்த குரலில் வலுவான கண்டனத்தை பதிவு செய்துள்ளதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாக தெரிவித்தார்.
மாலத்தீவு அதிபர் டாக்டர் முஹம்மத் முய்சுவின் துணிச்சலான நடவடிக்கையை பாராட்டிய பிரதமர், இஸ்ரேலிய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்களுக்கு தமது நாட்டில் நுழைவதற்கு தடை விதித்திருப்பது வரவேற்கத்தக்கது என்றார். மலேசியா சுதந்திரம் அடைந்ததில் இருந்து இஸ்ரேலின் செயல்களை ஒருபோதும் ஆதரித்ததில்லை என்றும் அவர் அழுத்தமாக கூறினார்.
பாலஸ்தீன மக்களின் அடிப்படை மனித உரிமைகளை மதிக்க மறுப்பது, சர்வதேச சட்டதிட்டங்களை மீறுவது, குறிப்பாக காசா Strip-ல் இனப்படுகொலையை நிறுத்தாமல் இருப்பது போன்ற இஸ்ரேலின் தொடர் நடவடிக்கைகளால் மலேசியா அந்நாட்டை அங்கீகரிக்கவில்லை என்று பிரதமர் அன்வார் விளக்கினார். இஸ்ரேல் விவகாரத்தில் மலேசியாவின் நிலைப்பாட்டையே மாலைத்தீவும் கொண்டிருப்பது சரியானது என்று அதிபர் முய்சு உடனான சந்திப்பில் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, பாலஸ்தீன மக்களின் உரிமைக்கான போராட்டத்தில் மாலைத்தீவு தொடர்ந்து உறுதுணையாக இருக்கும் என்று அதிபர் முய்சு தெரிவித்தார். 1967-க்கு முந்தைய எல்லைகளின் அடிப்படையில் கிழக்கு ஜெருசலேமை தலைநகராகக் கொண்ட ஒரு சுதந்திர பாலஸ்தீன அரசை அமைப்பதற்கு பாலஸ்தீன மக்களுக்கு முழு உரிமை உண்டு என்றும் அவர் திட்டவட்டமாக கூறினார்.
நேற்று மலேசியாவிற்கு நான்கு நாள் அரசு முறை பயணமாக வந்த அதிபர் முய்சுவுக்கு, பெர்டானா புத்ராவில் பிரதமர் அன்வார் இப்ராஹிம் தலைமையில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது. வரவேற்புக்குப் பின்னர், இரு தலைவர்களும் இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

