
இந்திய அரசியல் வரலாற்றிலேயே நாடாளுமன்றத்துக்கு ஒரே நேரத்தில் 3 பெண் கவிஞர்களை அனுப்பியிருப்பது திமுக மட்டுமே என்ற பெருமையை அக்கட்சி பெற்றுள்ளது.
திமுக சார்பில் கவிஞர்களான கனிமொழி, தமிழச்சி ஏற்கனவே எம்.பி.க்களாக உள்ள நிலையில் மற்றொரு கவிஞர் சல்மா எம்.பி.ஆகிறார். ஜூன் 19 நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில், மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன், பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம், ரொக்கையா மாலிக் என்ற கவிஞர் சல்மா, ஆகியோர் போட்டியிட உள்ளனர்.
இவர்களில் கவிஞர் சல்மா திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் பிறந்தவர். பொன்னாம்பட்டி பேரூராட்சி தலைவராக இருந்த சல்மா 2006 சட்டமன்ற தேர்தலில் மருங்காபுரி தொகுதியில் போட்டியிட்டவர்.
தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவராக பணியாற்றியுள்ளார் சல்மா. கவிஞர் சல்மா நீண்டகாலமாக திமுகவில் தீவிரமாக பணியாற்றி வருகிறார். எம்.எம்.அப்துல்லாவுக்கு வாய்ப்பு வழங்கப்படாத நிலையில் சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த கவிஞர் சல்மாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

