
மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலுக்கான 3 திமுக வேட்பாளர்களை முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் நேற்று அறிவித்தார். மேலும், கமல்ஹாசனுக்கு ஒரு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திமுகவில் வில்சனுக்கும் மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
தமிழத்திற்கான மொத்தம் உள்ள 18 மாநிலங்களவை உறுப்பினர்களில் 6 பேரின் பதவிக்காலம் ஜூலை 24ம் தேதியுடன் முடிவடைகிறது. அதன்படி, இந்த காலிப்பணியிடத்தை நிரப்புவதற்காக முன்கூட்டியே, அதாவது ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 26ம் தேதி அறிவித்தது.
ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கு 1 இடமும் ஒதுக்கப்படுகிறது. அதன்படி, திமுக வேட்பாளர்களாக பி.வில்சன், எஸ்.ஆர்.சிவலிங்கம் மற்றும் ரொக்கையா மாலிக் (எ) கவிஞர் சல்மா ஆகியோர் போட்டியிடுவார்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முதல்வர் அறிவித்தபடி திமுக சார்பில் ஏற்கனவே மாநிலங்களவை எம்பியாக இருந்த பி.வில்சனுக்கு மீண்டும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று மக்கள் நீதி மய்யத்திற்கு திமுக சார்பில் ஒதுக்கப்பட்ட ஒரு இடத்துக்கு நடிகர் கமல்ஹாசன் போட்டியிடுவார் என்று அக்கட்சி சார்பில் கூறப்பட்டுள்ளது.

