
சுங்கை,மே 30: மாநில ஆட்சிகுழு உறுப்பினராக சுங்கை சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு அ.சிவநேசன் பொறுப்பேற்றிருக்கும் காலக்கட்டமானது இம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கும் கோவில்களுக்கும் நம்பிக்கையான பொற்காலம் என தாப்பா ஊராட்சி மன்ற உறுப்பினர் கவுன்சிலர் பா.ஜெயகுமார் புகழாரம் சூட்டினார்.

பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளும் ஆலயங்களும் மட்டுமின்றி பொது இயக்கங்களும் கடந்தக்காலங்கள் போல் இல்லாமல் மாநில ஆட்சிகுழு உறுப்பினராக சிவநேசன் தலைமையேற்றது முதல் நனிச் சிறப்பாகவே இயங்கி வருகின்றன.அதன் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கு எல்லா காலக்கட்டத்திலும் கவனிக்கப்படுவதோடு அதற்கான நிதியுதவியோடு மானியங்களையும் நிறைவாகவே சிவநேசன் வழங்கி வருகிறார் என்றார் ஜெயகுமார்.

சுங்கை தமிழ்ப்பள்ளியின் விளையாட்டுப் போட்டியை சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து கொண்டு அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்து பேசுகையில் ஜெயகுமார் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் சிவநேசனின் அக்கறையும் கவனமும் தனித்துவமானது.அவர் இம்மாநிலத் தமிழ்ப்பள்ளிகளும் தமிழ்ப்பள்ளி மாணவர்களும் எல்லா நிலையிலும் சாதிக்க வேண்டும்,வெற்றிகளை குவிக்க வேண்டும் என இலக்கு கொண்டிருப்பவர் என்பதையும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,மாண்புமிகு சிவநேசன் பாராபட்சம் இன்றி உதவுபவர்.அவரிடம் சரியான அணுகுமுறையோடு முறையான ஆவணங்களையும் கொண்டு அணுகினால் எதிர்பார்ப்பதை நிறைவாகவே செய்தும் கொடுப்பவர்.அவரது தலைமைத்துவத்தில் குறைகள் இல்லாமல் மக்கள் சேவையை நிறைவாகவே செய்து வருகிறார் என்பதை யாராலும் மறுக்கவே முடியாது என்றார்.

