
ஷா ஆலம், ஜூன் 4-
வறட்சி காலத்தை எதிர்கொண்டாலும் சிலாங்கூர் மாநிலத்தில் நீர் விநியோகத்தில் எந்தவொரு தடையும் ஏற்படக் கூடாது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
இப்போது மிக கடுமையான வெயிலால் வறட்சி ஏற்படக்கூடிய அபாயம் உள்ளது.
இருப்பினும் சிலாங்கூர் மாநில மக்களுக்கு போதுமான குடிநீர் இருப்பதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும்.
சிலாங்கூர் மாநிலத்தில் வரும் செப்டம்பர் மாதம் வரை நீடிக்கும் என எதிர்பார்க்கப்படும் கோடைக் காலம் அல்லது தென்மேற்கு பருவமழையின் போது போதுமான அளவு நீர் விநியோகம் இருக்கும் என்று மாநில ஆட்சிக் குழு உறுப்பினர் டத்தோ இஷாம் ஹாஷிம் கூறியிருப்பதை வரவேற்கிறேன்.
சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள ஏழு முக்கிய நீர்த்தேக்கங்களும் 90 விழுக்காட்டுக்கும் அதிகமான நீர் கொள்ளளவைப் பதிவு செய்துள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதுவரை அனைத்து அணைகளிலும் நீர் கொள்ளளவு 90 சதவீதத்திற்கும் அதிகமாக உள்ளது. நாம் வறட்சி காலத்தை எதிர்கொண்டாலும் நீர் விநியோகத்தில் எந்த இடையூறும் இருக்காது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதை சிலாங்கூர் மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் என்பதோடு வறட்சி காலத்தில் நீர் தேக்கங்களில் மாசு படாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மிக அவசியம் என்று டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
சிலாங்கூரில் நீர் மாசுபாடு மற்றும் வறட்சி பிரச்சினைகளுக்கு எஸ்.ஜே.ஏ.எம். திட்டம் மூலம் 99 விழுக்காடு தீர்வினைக் காண முடியும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி முன்னதாக நம்பிக்கை தெரிவித்திருந்தார்

