வழக்கு முடியும் வரை கம்போங் ஜாவா வீடுகளை உடைக்க கூடாது: குணராஜ் வலியுறுத்து

நீதிமன்ற வழக்கு முடியும் வரை கம்போங் ஜாவா லோட் 11113இல் உள்ள வீடுகளை உடைக்கவோ மக்களை அச்சுறுத்தவோ கூடாது என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் வலியுறுத்தினார்.

கம்போங் ஜாவா லோட் 11113இல் 56 வருடங்களுக்கு மேலாக மக்கள் வசித்து வருகின்றனர்.

கிட்டத்தட்ட 19 நில உரிமையாளர்கள் உள்ளனர். அதே வேளையில் 25 குடும்பங்களும் இங்கு வசித்து வருகின்றனர். இந்நிலையில் இப் பகுதியில் டபிள்யூசிஇ நெடுஞ்சாலை திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதனால் நெடுஞ்சாலை நிறுவனத்திற்கும் மக்களுக்கும் இடையே பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டது. இறுதியில் குடியிருப்பாளர்களுக்கு இழப்பீடு வழங்க டபிள்யூசிஇ நெடுஞ்சாலை நிறுவனம் முன்வந்தது.

ஆனால் 75 சதவீதம் இழப்பீடு மட்டுமே இதுவரை வழங்கப்பட்டுள்ளது. அந்தப் பணமும் வழக்கறிஞரிடம் உள்ளது. அதே வேளையில் எஞ்சியுள்ள 25 சதவீத பணமும் மக்களுக்கு கிடைக்கவில்லை.

குறிப்பாக வழங்கப்பட்ட இழப்பீடு மக்களுக்கு போதுமானதாக இல்லை.  அதிருப்தி அடைந்த மக்கள் இந்த பிரச்சனையை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றுள்ளனர்.

இந்நிலையில் சம்பந்தப்பட்ட நெடுஞ்சாலை நிறுவனம் வீடுகளை உடைக்க குத்தகையாளரை நியமித்துள்ளது. அக் குத்தகையாளர்களும் இங்குள்ள நான்கு வீடுகளை உடைத்துள்ளனர்.

இங்கு தங்கியுள்ளவர்களை வெளியேறக் கூறி அச்சுறுத்தல்களை வழங்கி உள்ளதாக போலிஸில் புகார்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பிரச்சினையை இன்று காலை அடிதடி வரை சென்று விட்டது. இப் பிரச்சனைக்கு உரிய தீர்வு காணப்பட வேண்டும். சம்பந்தப்பட்ட தரப்பினருடன் உரிய பேச்சு வார்த்தைகள் நடத்தப்படுகிறது. வழக்குகள் முடியும் வரை அங்குள்ள வீடுகளை நெடுஞ்சாலை நிறுவனம் உடைக்கக் கூடாது. இங்குள்ள மக்களை யாரும் அச்சுறுத்தக் கூடாது என்று குணராஜ் வலியுறுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles