


சுங்கை சிப்புட், ஜுன்.11: பல ஆண்டுகளின் போராட்டம் மற்றும் சவால்களுக்கு பின் இங்குள்ள சுங்கை ரேலா தோட்டத்தில் புதிதாக கட்டப்பட்ட தமிழ்ப்பள்ளி திறப்புவிழா கண்டது. இப்பள்ளியின் கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்றதற்கான சான்றிதழ் பள்ளி நிர்வாகத்திடம் வழங்கப்பட்டதாக மலேசிய கல்வி துணையமைச்சர் வோங் கா வோ இந்நிகழவில் கலந்துக்கொண்டபோது கூறினார்.
இப்பள்ளி அனைத்து வசதிகளும் கொண்டுள்ளது. ஆனால், வெறும் 28 மாணவர்களை மட்டுமே கொண்டுள்ளது. ஆகையால், இப்பள்ளியின் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்க பள்ளி நிர்வாகம் உரிய நடவடிக்கைகளை எதிர்வரும் காலத்தில் எடுக்க வேண்டும் என்று அவர் அறிவுறுத்தினார்.
கடந்த 2012 ம் ஆண்டில் புதிய கட்டடம் நிர்மாணிக்க அனுமதி கிடைக்கப்பெற்றனர். இருப்பினும், பல போராட்டம் மற்றும் சவால்களை சந்தித்த பின் 13 வருடங்களுக்கு பிறகு இப்பள்ளி இறுதியில் திறப்புவிழா காணப்பட்டது. தற்போது 100 சதவீதம் நிறைவு பெற்று மிகவும் பாதுகாப்பாக இப்பள்ளி அமைந்துள்ளது என்று அவர் குறிப்பிட்டார்.
இப்பள்ளியின் வளர்ச்சிக்கு பள்ளி மேலாளர் வாரியம், பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி முன்னாள் மாணவர் சங்கம், பேராக் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மலேசிய அமைச்சரவைகளுக்கு இவ்வேளையில் நன்றி கூற கடமைப்பட்டுள்ளோம் என்று அவர் தெரிவித்தார்.
இந்நாட்டில் பாகுபாடுன்றி பள்ளி மேம்பாட்டிற்கு உதவிகள் நல்கப்பட்டு வருகிறது. இப்பள்ளியும் பழைய கட்டத்திலிருந்து புதிய கட்டடத்திற்கு வந்து விட்டனர். ஆகவே, இனிவரும் காலங்களில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு உறுதுணையாக செயல் நடவடிக்கைகள் மேற்கொள்வது மிகவும் அவசியம் என்று அவர் கருத்துரைத்தார்.
சுங்கை ரேலா தமிழ்ப்பள்ளி திறப்பு விழா கண்டுள்ளது. இது ஒரு மகிழ்ச்சியான தருணம். குறிப்பாக, 3 இலட்சத்து 60 ஆயிரம் ரிங்கிட் நிதி பற்றாக்குறையால் பள்ளி கட்டுமானப்பணி இழுபறியில் இருந்தது. இருப்பினும் 13 வருடம் கழித்து வெற்றி பெற்றுள்ளதாக பேராக் இந்திய சமூக ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இந்நிகழ்வில், தேசிய நில நிதி கூட்டுறவு சங்க நிர்வாகி டத்தோ சகாதேவன் சிறப்பு பிரமுகராக கலந்துக்
கொண்டார்.
பேரா மாநில கல்வி இலாகா, மாவட்ட கல்வி இலாகா அதிகாரிகள், சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் கேசவன், பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பிரபாகரன், பெற்றோர்கள் கலந்து சிறப்பித்தனர்.

