
கோலாலம்பூர் ஜூன் 15-
நாட்டில் இந்து கோவில்கள் குறித்து Kuil Haram என்ற வார்த்தை இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் வேதனையை ஏற்படுத்தி உள்ளது என்று பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா தெரிவித்தார்.
கோலாலம்பூர் ஜாலான் மஸ்ஜித் இந்தியாவில் உள்ள தேவிஸ்ரீ பத்ரகாளியம்மன் கோவில் விவகாரம் தலைதூக்கிய போது இந்த கோவில் திடீரென Kuil Haram என்று முத்திரை குத்தப்பட்டது.
பின்னர் நாட்டில் உள்ள பல கோவில்கள் சட்டவிரோத கோவில்கள் என்று கூறப்பட்டது.
இந்த Kuil Haram என்ற வார்த்தை மிகவும் கடுமையானது. இந்த வார்த்தையை பயன்படுத்துவதை நிறுத்தி கொள்ளுங்கள் என்று அவர் சொன்னார்.
இதனிடையே பினாங்கு மாநிலத்தில் வீடுகளை வாங்கும் இந்திய முஸ்லிம் மக்களுக்கு 5 விழுக்காடு கழிவு வழங்கப்படும் என்று அறிவிப்பு செய்யப்பட்டது.
இந்த அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.
அதேசமயம் பி-40 குடும்பங்களை சேர்ந்த அனைத்து இன மக்களுக்கும் இந்த சலுகை வழங்கப்பட வேண்டும் என்றார்.
வசதி குறைந்த அனைத்து இன மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும்.
இதை பினாங்கு மாநில அரசு கடைப்பிடிக்கும் என்று நம்புகிறோம் என்றார் அவர்.
இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற உச்சமன்ற கூட்டத்திற்கு பின்னர் ஊடகவியலாளர்களிடம் பேசுகையில் அவர் இதனை தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிபிபி கட்சியின் துணைத் தலைவர் டத்தோ மோகன் கந்தசாமி, செயலாளர் டத்தோ இண்டர்ஜிட் சிங், இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன், மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி, பினாங்கு மாநில தலைவர் ஜெயராமன், ஜொகூர் மாநில தலைவர் கிருஷ்ணன், மலாக்கா மாநில தலைவர் ஜெயசீனா, சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் உட்பட உச்சமன்ற உறுப்பினர்கள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

