

ஈப்போ, ஜுன்.16: இங்குள்ள இயோன் பாலிமில் அனைத்துலக பிரமாண்ட இந்தியர் விற்பனை மற்றும் பிரபலமான இந்தியர் உணவு திருவிழா மிகவும் விமரிசையாக நடந்தேறியது. இத்தகைய வணிக கண்காட்சி இளைய தொழில் முனைவோர் வணிகத்துறையில் மேம்பாடு காண பேருதவியாக அமைவதோடு அவர்களின் வாழ்வாதாரம் செழித்தோங்கும் என்று இந்த நிகழ்வை தொடக்கி வைத்தபோது முன்னாள் அமைச்சரும், பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினருமான வ.சிவகுமார் கூறினார்.
இது ஒரு மகிழ்ச்சியான தருணமாகும். அதிக இந்திய வணிகர்கள் இதுபோன்ற வணிக சந்தைகளில் ஈடுபடுத்திக் கொண்டு அவர்களின் உற்பத்தி பொருட்கள் வியாபாரம் செய்ய இது ஒரு வாய்ப்பாக வழங்கப்படுகிறது. இந்த அரிய வாய்ப்பினை தொழில்முனைவோர்கள் பயன்படுத்துக்கொள்ளும்படி அவர் குறிப்பிட்டார்.
இங்கு சுமார் 90 இந்திய தொழில்முனைவர்கள் தங்கள் வியாபாரத்தை அறிமுகம் செய்து வருகின்றனர். இதில இந்தியர்களின் பாரம்பரிய வியாபாரமும் இடம்பெற்று வருகின்றன. குறிப்பாக, இந்தியர்களின் பாரம்பரிய உணவுகளை தயார் செய்து விற்பனை செய்கின்றனர். அதோடு இத்தகைய காலகட்டத்திற்கு ஏற்றது போல நவீன உணவு முறைகளை இங்குள்ள இளைய சமூகத்தினர் தயார் செய்து வியாபாரம் செய்வது பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக உள்ளது என்று அவர் கருத்துரைத்தார்.
அரசாங்க துறையில் வேலை செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படும் இளைஞர்களுக்கு இத்தகைய வணிகத்துறை அவர்களுக்கு சிறந்த எதிர்காலத்தை கொண்டு வரும். ஆகையால், இந்திய சமூகத்தினர் ஜவுளி வியாபாரம் மற்றும் உணவு தயாரிக்கும் துறையில் முனைப்பு காட்டுவது அவசியம் என்று வ.சிவகுமார் சொன்னார்.
இந்த இந்தியர் வணிகம் மற்றும் இந்தியர் உணவு திருவிழா கண்காட்சியை கெடாவிலிருந்து ஜோகூர் பாரு வரை ஒவ்வொரு ஆண்டும் நடத்திக்கொண்டு வருகிறோம். இதற்கு இந்திய வணிகர்கள் மற்றும் பயனீட்டாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் வாயிலாக அதிகமான தொழில்முனைவோர்கள் உருவாகி கொண்டு வருகின்றனர் என்று ” கலர்ஸ் ஓப் இந்தியா” நிறுவனத்தின் தொழிலதிபர் ஜி.எம். ரவீந்திரன் கூறினார்.
இந்த வணிக கண்காட்சி வாயிலாக உள்நாட்டு மற்றும் அயல்நாட்டு இந்திய வணிகர்கள் முழுமையாக ஈடுபட்டு வருகின்றனர். அத்துடன், இங்கு வரும் பயனீட்டாளர்கள் நன்மை அடைய வேண்டும் என்ற நோக்கத்திற்காக அவர்களின் பிள்ளைகளுக்கு அல்லது சிறார்கள் பங்கு பெறுவதற்கு பல போட்டி விளையாட்டுகளை நடத்தி்வருகிறோம். அத்துடன், பயனீட்டாளர்களுக்கு மகிழ்ச்சிகரமான சூழ்நிலை உருவாக்கும் பொருட்டு உள்நாட்டு் மற்றும் இந்திய நாட்டு் கலைஞர்கள் வருகையாளர்களை மகிழ்ச்சிப்படுத்துகின்றனர். உள்நாட்டு கலைஞர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்த இது ஒரு தளமாக விளங்கிறது என்று அவர் எடுத்துரைத்தார்.

