

ஈப்போ,ஜூன்16: நாட்டில் ஆங்காங்கே அரசாங்கத்தாலும் அரசு இலாகாவாலும் ஏற்பாடு செய்யப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சியை கல்வியை முடித்து வேலை தேடும் இளையச் சமூகம் நன்முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.
கடந்தகாலங்களில் வேலைக்காக அலைந்த சூழல் தற்போது இல்லை.வேலை வாய்ப்பை கொண்டுள்ள நிறுவனங்களே வேலை வாய்ப்பு கண்காட்சிகளில் ஈடுப்பட்டு தங்களுக்கு தேவையான ஊழியர்களை தேர்வு செய்கிறார்கள்.இம்மாதிரியான வாய்ப்புகள் நம் வீட்டு கதவை தட்டுவது போன்றது.எனவே,இம்மாதிரியான கண்காட்சிகளில் இருக்கும் வேலை வாய்ப்புகளை இளையோர் நன் முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

குறிப்பாக இந்திய இளைஞர்கள் வேலை கிடைக்கவில்லை என விரக்தி கொள்வதை காட்டிலும் இம்மாதிரியான வாய்ப்புகளை தங்களின் எதிர்காலத்திற்கான வாய்ப்பாக பயன்படுத்தி கொள்ள வேண்டும் என பத்துபாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.
அதுபோல்,இம்மாதிரியான வேலை வாய்ப்பு கண்காட்சிகளில் வேலை வாய்ப்பு மட்டுமின்றி உயர்கல்வி வாய்ப்புகளும் இடம் பெற்றுள்ள நிலையில் அரசு கல்லூரி,பல்கலைக்கழகங்களில் வாய்ப்பு கிடைக்காதவர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் உயர்கல்வி கூடங்களில் இணைந்து தங்களின் எதிர்காலத்தை நம்பிக்கையான இலக்கை நோக்கி பயணிக்க வைக்க முடியும் எனவும் குறிப்பிட்டார்.
அதேவேளையில்,தொழில்துறை சார்ந்த கல்வியில் இந்திய இளைஞர்களின் கவனம் திரும்ப வேண்டும் எனவும் அவர் மேலும் கேட்டு கொண்டார்.உலகெங்கும் தொழில்திறன் கல்வி பெரும் கவனம் இழுத்துள்ள நிலையில் நம் இன இளையோரின் அத்துறையில் ஆளுமையும் திறனும் பெற்று மிளிர வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.
ஈப்போ பாஃலின் ஏயோன் பீஃக் பேராங்காடியில் சொக்சோ இலாகாவின் ஏற்பாட்டில் நடைபெற்ற வேலை வாய்ப்பு மற்றும் உயர்கல்வி வாய்ப்பு என்னும் கண்காட்சியை தொடக்கி வைத்து பேசுகையில் சிவகுமார் இவ்வாறு கருத்துரைத்தார்.
அதுமட்டுமின்றி,இல்லதரசிகளுக்கான சொக்சோ திட்டத்தில் பத்துகாஜா நாடாளுமன்றத்திலுள்ள குடும்ப மாதர் 50 பேருக்கு மொத்தமான வெ.6 ஆயிரமும் சுயத்தொழில் செய்வோருக்கு வெ.3,500 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.முன்னதாக சொக்சோவில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் வாய்ப்புகள்,வசதிகளையும் இந்தியச் சமுதாயம் நன்முறையில் விளக்கம் பெற்று நன்மையும் அடைய வேண்டும் எனவும் அவர் கேட்டு கொண்டார்.

