நம்பிக்கையான எதிர்காலம் கல்வியால் மட்டுமே கட்டமைக்கப்பட்டுள்ளது – வெ.20 ஆயிரம் வழங்கினார் சிவகுமார்!!

பத்துகாஜா,ஜூன்17: நம்பிக்கையான எதிர்கால சமூகத்தை கட்டமைப்பதில் கல்வி பிரதான பங்களிப்பை செய்கிறது.கல்வி மட்டுமே ஒரு இனத்தின்,ஒரு சமூகத்தின் எதிர்காலத்தை மாற்றியமைக்கும்.மேலும்,ஒரு நாட்டின் வளர்ச்சியும் மேம்பாடும் கல்வியால் மட்டுமே உருமாற்றம் காணும் என்றும் நினைவுறுத்திய பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் வ.சிவகுமார் கல்வியில் ஒருபோதும் மாணவர்கள் பின் தங்கி விடக்கூடாது என நினைவுறுத்தினார்.

ஒரு குடும்பத்தின் நம்பிக்கையும் எதிர்காலமும் அவ்வீட்டுப் பிள்ளைகளின் கல்வி வளர்ச்சியிலிருந்துதான் தொடங்குவதாக கூறிய அவர் அக்குடும்பத்தின் பொருளாதார நிலை மாறவும் மேம்பாடும் காணவும் கல்வியே பிரதானம் என்றும் குறிப்பிட்டார்.

அதேவேளையில்,மலேசிய அரசாங்கத்தின் கல்வி கொள்கையும் செயல்பாடும் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு நிகராகவும் உலகளாவிய நிலையில் தரம் மிக்கதாகவும் இருப்பதை சுட்டிக்காண்பித்த சிவகுமார் சிறந்த கல்வி எதிர்காலத்திற்கு மலேசியா உத்தரவாதம் மிக்க நாடு என்பதையும் அவர் தெரிவித்தார்.

எஸ்.பி.எம் தேர்வில் சிறந்த அடைவுநிலைகளைக் கொண்ட மாணவர்களுக்கு ஊக்கத்தொகையாக சுமார் 40 மாணவர்களுக்கு ஒருவருக்கு வெ.500 என்னும் நிலையில் வெ.20ஆயிரத்தை வழங்கிய சிவகுமார் உயர்கல்வி கூடங்களிலும் சிறந்த மாணவர்களாக தங்களின் கல்வி பயணத்தை நிறைவு செய்து சிறந்த எதிர்காலத்தை இம்மாணவர்கள் உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

கல்வி சார்ந்த உதவிகளுக்கும் தேவைகளுக்கும் தனது சேவை மையத்தின் கதவுகள் எந்நேரமும் திறந்தே இருக்கும் என கூறிய அவர் மாணவர்களின் எதிர்காலத்தை சிறந்த இலக்கை நோக்கி பயணிப்பதை உறுதி செய்வதில் தாம் தொடர்ந்து தீவிர முனைப்பு காட்டுவேன் என்றும் அவர் கூறினார்.மேலும்,பிள்ளைகளின் கல்வி விடயத்தில் பெற்றோர்களின் கண்காணிப்பு மிகவும் அவசியமெனவும் நினைவுறுத்திய சிவகுமார் கல்வியால் மட்டுமே நம்மால் நம்பிக்கையான வருங்கால தலைமுறையை உருவாக்க முடியும் என்றும் குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி,கல்வியில் நன்நிலையில் வெற்றி பெறாத மாணவர்கள் சோர்ந்துவிடக்கூடாது.நாட்டில் தற்போது அதிகமான தொழில்திறன் கல்வி மையங்கள் உள்ளன.அரசாங்கமும் தொழில்திறன் கல்வியை தொடர்ந்து ஊக்குவித்து வருகிறது.அத்துறையில் இம்மாணவர்கள் இணைந்து தங்களின் எதிர்காலத்தை ஒளிமயாக உருமாற்றிக் கொள்ள வேண்டும் எனவும் ஆலோசனை வழங்கினார்.

தனியார் மற்றும் அரசு தொழில்திறன் கல்விகூடங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வமாகவும் நம்பிக்கையான எதிர்காலத்தை இளைய சமூகத்திற்கு வித்திடவும் தயாராகவே உள்ள நிலையில் அதற்கான உதவித்தொகைகளும் கிடைக்கும் சூழலில் இத்துறையில் மாணவர்கள் முனைப்பு காட்ட வேண்டும் எனவும் அவர் மேலும் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles