

தைப்பிங், ஜுன்.20: கடந்த 33 ஆண்டுகளாக தேசிய முன்னணியி்ல் தோழமை கட்சியாக சேவையாற்றி வரும் ஐ.பி.எப். கட்சி உறுப்பு கட்சியாக செயல்பட அனுமதியும், வாய்ப்பும் வழங்க வேண்டும் என்று புக்கிட் கந்தாங் தொகுதியின் 33 வது ஆண்டு பொதுக்கூட்டத்தில் பேராக் ஐ.பி.எப். கட்சியின் தலைவர் மாணிக்கம் கோரிக்கை மனு வைத்தார்.
பாமர இந்திய மக்களுக்காக ஐ.பி.எப். கட்சியை டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் உருவாக்கினார். கடந்த 33 ஆண்டுகளாக அவரது பாதையில், அவரின் கொள்கைக்கு ஏற்றவாறு இன்னமும் தேசிய முன்னணியுடன் இணைந்து சேவையாற்றி வருகிறது. ஆகையால், தேசிய முன்னணியில் உறுப்பு கட்சியாக இடம்பெற புக்கிட் கந்தாங் தொகுதி கோரிக்கை மனு வைப்பதாக அவர் சொன்னார்.
அதுமட்டுமின்றி, பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட், ஐ பி எப் கட்சியின் மக்கள் சேவையை நன்கு அறிந்தவர். ஆகையால், பேராக் மாநிலத்தின் சில சலுகைகளை ஐ பி எப் கட்சிக்கு வழங்க கோரிக்கை வைப்பதாக அவர் கூறினார்.
குறிப்பாக, பேராக் மாநிலத்தில் ஊராட்சி மன்ற உறுப்பினர்களாகவும், இந்திய கிராமத்து தலைவர்களாகவும், மருத்துவமனை வருகையாளர்கள் அதிகாரி போன்ற பதவிகளுக்கு நியமனம் செய்யும்படி அவர் கோரிக்கை வைத்தார்.
இந்நாட்டின் பொதுத்தேர்தல் காலத்திலும், இடைத்தேர்களிலும் ஐபிஎப் கட்சியின் சேவையானது அளப்பரியது. ஆகையால், இத்தகைய நியமனப் பதவிகள் ஓர் அங்கீகாரமாக இருக்கும் என்று அவர் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில், புக்கிட் கந்தாங் தொகுதியின் முன்னாள் அம்னோ தலைவரும் இன்றைய பேராக் மாநில தகவல் பிரிவு தலைவருமாகிய கமாருடின் அபுக்பாக்கர், ஐபி எப் தேசிய உதவித்தலைவர் அப்பளசாமி, பொருளாலர் காளிமுத்து, தொகுதித்தலைவர்களான எம்.சுப்பிரமணியம், பொன்னையா ,துணைத்ணலைவர் பெ.சுப்பிரமணியம் மற்றும் புக்கிட் கந்தாங் நிர்வாகத்தினர், பிரமுகர்கள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து சிறப்பித்தனர்.

