புந்தோங் குப்பை லாரிகள் தளமா? மக்கள் குமுறல்

ஈப்போ, ஜுன். 21- கடந்த 1957 ம் ஆண்டிற்கு முன்பாகவே இந்த புந்தோங் வட்டாரத்தில் குப்பை லோரிகள் ஒன்றுகூடும் தளமாக புந்தோங் ஸ்ரீ மகா காளியம்மன் கோவிலின் பின்புற பகுதி இருந்து வந்தது. அப்பொழுது இங்கு அதிகமான ஈப்போ சிட்டி குடியிருப்பு பகுதிகளும் இருந்தன என்று வரலாற்று பதிவுகள் கூறுகின்றன. ஆனால், இந்த வளாகத்தின் முன்புறத்தில் பிரதான சாலை இருப்பதால் காலை வேளையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் பாதுகாப்பு கேள்வி குறியாக உள்ளது என்று புந்தோங் நடவடிக்கை குழுவின் ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயசீலன் கூறினார்.

அதுமட்டுமின்றி, இங்கிருந்து காலையில் வெளியே செல்லும் குப்பை லாரிகளிலிருந்து துர்நாற்றம் வீசுவதால் இச்சாலையை பயன்படுத்துவோர் பெரும் பாதிப்பை எதிர்நோக்குவதாக இங்குள்ள பெற்றோர்கள் குமுறுவதாக அவர் சொன்னார்.

தற்போது மற்றொரு புதிய பிரச்சினையும் உருவாகி விட்டது. ஏற்கனவே, இங்கு ஈப்போ மாநகர் மன்றத்தின் லாரிகள் ஒன்றுகூடும் தளமாக இருந்து வந்தது. ஆனால், தற்போது சுலோ இமாஸ்( Suluh Emas) என்ற தனியார் நிறுவனம் ஈப்போ மாநகர் மன்றத்தின் குப்பைகள் அள்ளும் குத்தகையாளர் என்ற அடிப்படையில் அவர்களது குப்பை லாரிகளையும் வேலை முடிந்தவுடன் இங்கு வந்து நிறுத்தி வைக்கப்படுகின்றன என்று அவர் மிகவும் மனவேதனையுடன் கூறினார்.

காலை நேரத்தில் சுமார் 60 லாரிகள் குப்பைகள் அள்ளும் பணிகளுக்கு வெளியாகின்றன. அவ்வேளையில் புந்தோங்கில் சாலை போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால், பெற்றோர்களும் மாணவர்களும் பல்வேறு பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவது முற்றிலும் உண்மையாகும் என்று அவர் குறிப்பிட்டார்.

இவ்விவகாரத்தில் சாலையை பயன்படுத்தோர் பாதுகாப்பு மிகவும் அவசியம் என்பதனை டத்தோ பண்டார் உணர்ந்து செயல்படுவது அவசியமாகும். புந்தோங் வாழ் மக்களுக்கு முன்னுரிமை வழங்குவதை உறுதி செய்ய வேண்டும். ஏதாவது அசம்பாவிதங்கள் நடந்த பின் முறையான நடவடிக்கைகள் மேற்கொள்வது ஏற்புடையதல்ல. இங்கு அதிகமான இந்தியர்கள் வாழும் இடமென்பதால் பாகுபாடு தேவையில்லை என்று அவர் எச்சரித்தார்.

தற்போது தனியார் நிறுவனமொன்று குப்பைகள் அள்ளும் பணியை மேற்கொண்டு் வருகின்றன. இந்த குத்தகை நிறுவனத்தின் லாரிகளும் இந்த புந்தோங்கில்தான் நிறுத்தி வைக்கின்றன. இந்த தனியார் நிறுவனம் லாரிகள் நிறுத்த மாற்று இடத்தை அடையாளம் கண்டு செல்லவேண்டும். அவர்களும் இங்கே லாரியை நிறுத்துவது முறையல்ல என்று அவர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் குறித்து பேராக் ஆட்சிக்குழு உறுப்பினர்களும், மலேசிய வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சரும் புந்தோங் மக்களின் வாழ்வாதரம் குறித்து அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles