ஆசியான் – அமெரிக்கா உச்ச நிலை மாநாட்டுக்கு அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு அழைப்பு!

கோலாலம்பூர், ஜூலை 11 – எதிர்வரும் அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறும் ஆசியான் – அமெரிக்கா மற்றும் கிழக்காசிய உச்ச நிலை மாநாடுகளில் பங்கேற்குமாறு, பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்புக்கு முறைப்படி அழைப்பு விடுத்துள்ளார்.

இது சாத்தியமானால், அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முதல் மலேசியப் பயணமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ அன்வாரை மரியாதை நிமித்தம் சந்தித்த போது, அந்த அழைப்பு விடுக்கப்பட்டது.

நாடாளுமன்ற கட்டிடத்தில் சுமார் 40 நிமிடங்கள் நீடித்த இந்தச் சந்திப்பு, இந்த ஆண்டு தொடக்கத்தில் பதவியேற்ற பிறகு ரூபியோவின் முதல் ஆசியா பயணத்தின் ஒரு பகுதியாகும்.

இவ்வேளையில் அமெரிக்காவுடனான தொடர்ச்சியான நெருக்கமான ஒத்துழைப்பானது இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், இந்தோ-பசிபிக் வட்டார நிலைத்தன்மை, செழிப்பு மற்றும் அமைதிக்கும் பங்களிக்கும் என அச்சந்திப்பின் போது பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், டிஜிட்டல் முதலீடு, செயற்கை நுண்ணறிவு, பாதுகாப்பு மற்றும் கல்வி போன்ற துறைகளில் பரந்த ஒத்துழைப்பையும் இந்த விவாதங்கள் உள்ளடக்கியிருந்தன.

பாலஸ்தீனம், யுக்ரேய்ன் மற்றும் மியன்மாரில் உள்ள சூழ்நிலைகள் உட்பட, வட்டார பிரச்சனைகள் குறித்தும் தலைவர்கள் கருத்துக்களைப் பரிமாறிக் கொண்டனர்.

ஜூலை 8 முதல் 11 வரை கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறும் 58-ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டம் மற்றும் அதன் தொடர்புடைய கூட்டங்கள் உட்பட உயர்மட்டக் கூட்டங்களில் கலந்து கொள்வதற்காக ரூபியோ கோலாலம்பூர் வந்துள்ளார்.

bernama

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles