
பீடோர்,ஜூலை 14: எந்தச் சூழலினாலும்,எந்தக் காரணத்தினாலும் குவாலா பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி மூடப்படாது என்று கல்வி துணை அமைச்சர் வோங் கா வோ மற்றும் பேரா மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் ஆகியோர் உறுதி அளித்தனர்.
கற்றல் கற்பித்தலுக்கு உகர்ந்த பாதுகாப்புடன் இல்லை என பொதுப்பணித் துறையின் அறிக்கையின் அடிப்படையில் மாற்றுப்பள்ளியில் குவாலா பெர்ணம் தோட்டத் தமிழ்ப்பள்ளி தற்காலிகமாய் இயங்கும் என்பதை அறிவித்த அவர்கள் அப்பள்ளியை நிரந்திரமாக மூடும் எண்ணம் எதனையும் அரசு கொண்டிருக்கவில்லை என்றும் தெரிவித்தனர்.
அப்பள்ளிக்கூடம் 1940கள் முதல் இயங்கி வரும் நிலையில் மிக பழமையான அக்கட்டிடத்தை கறையான் அரித்துள்ளதால்,கற்றல் கற்பித்தலுக்கு பெரும் தடை ஏற்பட்டிருப்பதாக தெரிய வந்துள்ள நிலையில் இப்பள்ளியை அதன் அடையாளம் தொலையாமல் மீட்டெடுக்கும் பணியில் கல்வி துணை அமைச்சரும் மாநில இந்திய நலப்பிரிவு பொறுப்பாளருமான சிவநேசனும் தீவிரமாய் களமிறங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
பள்ளியின் தலைமையாசிரியர்,பெற்றோர் ஆசிரியர் சங்கம் மற்றும் பள்ளியின் வாரியக்குழுவு ஆகியோருடன் சுங்கை சட்டமன்ற சேவை மையத்தில் நடைபெற்ற சந்திப்பிற்கு பின்னர் துணை கல்வி அமைச்சரும் சிவநேசனும் மேற்கண்டவாறு தெரிவித்தனர்.
இவ்விவகாரம் தொடர்பில் தொடர்ந்து பேசிய சிவநேசன் ஒரு காலத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்ற இப்பள்ளியில் தற்போது 11 மாணவர்களும் 7 ஆசிரியர்களும் இருப்பதாகவும் அம்மாணவர்களில் மூவர் மட்டுமே அத்தோட்டத்தை சார்ந்தவர்கள் எனவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில்,இப்பள்ளிக்கூடம் தற்காலிகமாக அருகிலுள்ள மற்றொரு தமிழ்ப்பள்ளியில் அதன் கற்றல் கற்பித்தலை தொடர்வதால் பள்ளிப் போக்குவரத்து செலவினத்திற்காக வெ.10ஆயிரத்தை மாநில அரசு மானியமாக தாம் வழங்குவதாகவும் கூறினார்.

இம்மானியத்தின் வாயிலாக பள்ளிப் போக்குவரத்து சேவைக்கு செலுத்தப்படாத 6 மாத கட்டணத்தை செலுத்தும் அதேவேளையில் அடுத்த 1 ½ ஆண்டுக்கான செலவினத்தையும் ஈடுகட்ட முடியும் என்றார்.
இப்பள்ளியை சீரமைப்பதா அல்லது புதிதாக கட்டுவதா என எழுந்த கேள்விக்கு விரைவில் தீர்வு காணப்படும் என கூறிய சிவநேசன் அது தொடர்பிலான முடிவை எடுப்பதற்கு முன்னதாக ஊராட்சி மன்றம்,மாவட்டம் மற்றும் மாநில பொதுப்பணித்துறையோடு கல்வி துணை அமைச்சர் ஆகியோருடன் பள்ளிக்கு நேரடி வருகை தரவிருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
முன்னதாக,இப்பள்ளிக்கூடத்தை புதிதாக கட்டுவதென்றால் அதன் செலவினம் வெ.2 லட்சத்து 30ஆயிரத்தை எட்டும் என வரையறுக்கப்பட்ட நிலையில் பாகான் டத்தோ நாடாளுமன்ற உறுப்பினரும் துணைப்பிரதமருமான டத்தோஶ்ரீ ஜாயிட் அமிடி வெ.2 லட்சம் தருவதாகவும் உறுதி அளித்திருப்பதாக பள்ளி வாரியக்குழுவும் தலைமையாசிரியரும் தெரிவித்தனர்.
அந்நிதி ஜூலை இறுதிக்குள் கிடைத்துவிடும் என்றும் அவர்கள் குறிப்பிட்டதையும் சிவநேசன் சுட்டிக் காண்பித்தார்.
அதுமட்டுமின்றி,அப்பள்ளியை சீரமைப்பு செய்வதால் இச்சிக்கலுக்கு தீர்வு எட்டுமென்றால் அப்பணி சுமார் 4 மாதங்களில் முடிவடையலாம் என்பதையும் விவரித்த அவர் அனைத்து தரப்பின் ஆலோசனைக்கு பின்னரே புதிய கட்டிடம் எழுப்புவதா அல்லது சீரமைப்புகளை மேற்கொள்வதா என்பது உறுதி செய்யப்படும் என்றார்.
எது எப்படி இருப்பினும் இப்பள்ளிக்கூடம் விரைவில் புதிய தோற்றத்தையும் பாதுகாப்பான கற்றல் கற்பித்தல் சூழலையும் கொண்டிருக்கும் என்பதை உறுதி அளித்த சிவநேசன் அதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை துணை கல்வி அமைச்சர் மேற்கொள்ளும் அதேவேளையில் மாநில ஆட்சிக்குழு உறுப்பினராய் இப்பள்ளிக்கு தேவையான ஆதரவை தாம் வழங்குவேன் என்றும் சிவநேசன் உறுதி அளித்தார்.

