

கோலாலம்பூர் ஜூலை 27-
நேற்று தலைநகரில் நடைபெற்ற “தூருன் அன்வார்” பேரணி மக்கள் திரளின் அடிப்படையில் மிகவும் வெற்றிகரமானதாக அமைந்தது என்று உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி தெரிவித்தார்.
சோகோவிலிருந்து தேசிய மசூதி வரை மக்கள் கூட்டம் வெள்ளமாகப் பரவியது.
பேரணியில் பங்கேற்றோர் எண்ணிக்கை 10,000 முதல் 15,000 வரை எனக் குறைத்து காண்பிக்க சில தரப்பினர் முயன்றாலும், உண்மையான எண்ணிக்கை 1.5 லட்சம் முதல் 2 லட்சம் வரை என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
சிறிய மழை கூட மக்கள் உற்சாகத்தை தடுக்கவில்லை.
பேரணியின் பிற்பகுதியில் கூட்டத்தின் அளவை சில எதிர்க்கட்சித் தலைவர்கள் மிகைப்படுத்தி பேசியிருக்கலாம். இருப்பினும், அந்த எண்ணிக்கைகள் ஒரு தெளிவான உண்மையை வெளிப்படுத்தின.
இந்த மக்கள் கூட்டம் பிரதமர் அன்வார் இப்ராகிம் பதவியை விலக வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தது என்று அவர் சொன்னார்.
அதன் அடிப்படையில் அன்வாரின் “ரெபார்மாசி” இயக்கத்துக்காகவே எதிர்கட்சியில் இருந்தபோது நடத்தப்பட்ட போராட்டங்களை அவரே சந்திக்க நேரிட்டது எனக் கூறலாம்.
அங்கு பெரும்பாலான தேசிய கூட்டணி (PN) மூத்த தலைவர்கள் நிகழ்வில் கலந்துகொண்டு ஏன் அன்வார் விலக வேண்டும் என்பதைக் கூறினர்.
பேரணியில் கலந்து கொண்டவர்கள் பெரும்பாலும் மலாய்காரர்களாக இருந்தாலும், சீனர்கள் மற்றும் இந்தியர்களும் கணிசமாகக் கலந்து கொண்டனர்.
சீனர்களை “கெராக்கான் ” என்ற கட்சி கொண்டு வந்தது, இந்தியர்களை “உரிமை” மற்றும் MIPP எனும் கட்சிகள் கொண்டுவந்தன.
உரிமை அமைப்பின் ஆதரவாளர்கள் பினாங்கு, சிலாங்கூர், கூட்டரசு பிரதேசம் மற்றும் நெகிரி செம்பிலான் ஆகிய மாநிலங்களில் இருந்து, மஸ்ஜிட் இந்தியா பகுதியிலுள்ள தேவி ஸ்ரீ பாத்ரகாளியம்மன் இந்து கோவிலிலிருந்து பேரணியை ஆரம்பித்து சோகோவுக்கு சென்றது.
நேற்றைய பேரணி, தொடக்கம் மட்டும் தான் — மக்களின் கோரிக்கையில் டத்தோஸ்ரீ அன்வார் பதவியிலிருந்து விலக வேண்டும் என்பதற்கான ஆரம்பம் என்று அவர் சொன்னார்.

