
சுங்கைப்பட்டாணி, ஜூலை 28-
40 ஆண்டுகளுக்குப் பிறகு பழைய பள்ளி நண்பர்களுடனான ஒன்றுகூடல் நிகழ்வுக்காக தொடங்கப்பட்ட புலனக்குழுவினால், புகழ்பெற்ற ஒரு காப்புறுதி நிறுவனத்தின் தொழிலதிபரான தி.சந்திரராஜன், மூன்றே மாதங்களில் 15 லட்சம் ரிங்கிட் பரிகொடுத்த சம்பவம் இங்கு பெறும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பால்ய நண்பர் என்று கூட பாராமல், இல்லாத கட்டுமானத் திட்டத்தை காட்டி தன்னை நூதனமாக ஏமாற்றி விட்டதாகக் குறிப்பிட்ட அவர், இளங்கோ எனும் அந்த மோசடி பேர்வழி மீது இங்குள்ள சுங்கைப்பட்டாணி மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு தொடந்துள்ளார்.
2020-ஆம் ஆண்டில் நடந்த இச்சம்பவத்தைத் தொடர்ந்து, கிட்டத்தட்ட 3 ஆண்டுகளாக நீடித்த காவல்துறையின் தீவிர புலனாய்வுக்குப் பிறகு, நேற்று மதியம் பேரா, செமோரிலுள்ள ஒரு காப்பாகத்தில் இளங்கோ கைது செய்யப்பட்டு, சுங்கைப்பட்டாணி காவல் நிலையத்துக்குக் கொண்டு வரப்பட்டார்.
தன்னை மனநலம் பாதிக்கப்பட்டவராகக் காட்டிக் கொள்ள முயலுவதாகச் சந்தேகிக்கப்படும் இளங்கோ, இன்று காலை 9.00 மணியளவில் கலைவிலங்கிடப்பட்ட நிலையில் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார். தனது பால்ய நண்பரான சந்திரராஜனை 15 லட்சம் ரிங்கிட் வரை மோசடி செய்திருப்பதாகக் கூறி, அரசு தரப்பு வழக்கறிஞர் அவர் மீது 58 குற்றச்சாட்டுகளை வாசித்தார்.
எனினும், இளங்கோ அக்குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணைக் கோரினார். வழக்கை செவிமெடுத்த மாஜிஸ்ட்ரேட் நீதிபதி, 3 குற்றச்சாட்டுகளுக்கு தலா 6,000 ரிங்கிட் ஜாமின் தொகை நிர்ணயித்து, ஒரு நபர் உத்தரவாதத்துடன் மொத்தம் 1 லட்சத்து 25ஆயிரம் ரிங்கிட் ஜாமின் தொகை அறிவித்தார். வழக்கு விசாரணை ஆகஸ்ட் 14ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இவ்வழக்கில் இளங்கோ குற்றவாளி என நிரூபிக்கப்பட்டால் 1 முதல் 10 ஆண்டுகள் வரை சிறைத்தண்டணை விதிக்க சட்டம் வகை செய்வதாக தெரிவிக்கப்பட்டது.
பால்ய நண்பரையே நூதனமாக ஏமாற்றத் துணிந்திருக்கும் இளங்கோ, தலைநகர் கோலாலம்பூரிலுள்ள ஓர் அனைத்துலக தனியார் பள்ளியில் மேலாளராகப் பணியாற்றி வந்துள்ளார். கோவிட்-19 பெருந்தொற்று முடிவுக்கு வந்த காலக்கட்டத்தில், பழைய பள்ளி நண்பர்களை ஒன்றிணைக்கும் முயற்சியாக, புலனக் குழுவை தொடங்கியிருக்கிறார்.
அதில் சந்திரராஜனையும் இணைத்துக் கொண்ட இளங்கோ, நண்பர்கள் ஒன்றுகூடல் நிகழ்வுக்கும் ஏற்பாடு செய்திருக்கிறார். தவிர்க்க முடியாத அலுவலினால், சந்திரராஜன் அந்த ஒன்றுகூடல் நிகழ்வில் பங்கேற்கவில்லை. எனினும், ஒரு வாரம் கழித்து சந்திரராஜனை தொலைபேசி வழி தொடர்பு கொண்ட இளங்கோ, தான் வேலை செய்யும் இடத்தில் சந்திக்க அழைப்பு விடுத்திருக்கிறார்.
சந்திரராஜனும் இளங்கோ பணி செய்யும் அந்த அனைத்துலக தனியார் பள்ளிக்குச் சென்றிருக்கிறார். தன் பணியிடத்தை சுற்றிக் காண்பித்து, இங்கு இன்னும் சில மேம்பாட்டுப் பணிகள் தொடங்கப்பட இருப்பதாகவும், தன்னால் அந்த கட்டுமான குத்தகைகளைப் பெற முடியும் என்றும் கூறி, சந்திரராஜனை முதலீடு செய்யுமாறு இளங்கோ நயமாகப் பேசியிருக்கிறார்.
முதல் கட்டமாக ஒரு துப்புரவு குத்தகையை அவர் சந்திரராஜனுக்குப் பெற்றுத் தந்திருக்கிறார். இளங்கோவின் செயல்பாடுகளிலும் அவர் பணியாற்றும் அனைத்துலக தனியார் பள்ளி மீதும் நம்பிக்கைக் கொண்ட சந்திரராஜன், முதலீட்டுத் திட்டத்திற்கு ஒப்புக் கொண்டுள்ளார்.
அடுத்த மூன்று மாதங்களில் இளங்கோ கேட்கும் முதலீட்டு தொகையை, அவரின் வங்கிக் கணக்கில் சேர்ந்து வந்துள்ளார் சந்திரராஜன். இதற்கிடையில், மேம்பாட்டுப் பணிகள் குறித்து அவர் அவ்வப்போது கேள்வி கேட்கும் போது, இளங்கோவின் பதிலில் அவருக்கு திருப்தி இல்லை.
கொடுத்த முதலீட்டுக்கு வருமானமும் குறித்த நேரத்தில் வராத நிலையில், இளங்கோவின் பணியிடத்துக்குச் சென்ற சந்திரராஜனுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.
அங்கு எந்தவொரு மேம்பாட்டுத் திட்டமும் நடைபெறவில்லை என்பதை அந்த அனைத்துலக தனியார் பள்ளி நிர்வாகத்தின் மூலம் அறிந்து கொண்ட சந்திரராஜன், தான் நயமாக ஏமாற்றப்பட்டு விட்டதாக உணர்ந்துள்ளார்.
இளங்கோவை தொடர்பு கொள்ள முயற்சித்து எல்லாம் தோல்வியில் முடிந்த நிலையில், அடுத்தக் கட்ட நடவடிக்கையாக போலீஸ் புகார் செய்தார். அதன் பிறகு, இளங்கோ ஒரு தங்கும் விடுதியில் தூக்க மாத்திரைகள் உட்கொண்டு தற்கொலைக்கு முயன்றதாக தனக்குத் தகவல் கிடைக்கப்பெற்றதாக சந்திரராஜன் தெரிவித்தார்.
அறையிலிருந்து மூச்சுத் திணறல் சத்தம் கேட்டு, தங்கும் விடுதி பணியாளர்கள் அவரை காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு, ஒரு வாரம் கழித்து செமோரிலுள்ள ஒரு காப்பகத்தில் இளங்கோ அடைக்கலம் புகுந்த தகவல் தனக்குக் கிடைக்கப்பெற்றதாக சந்திரராஜன் சொன்னார்.
போலீஸ் உதவியுடன் அவரிடமிருந்து பணத்தை மீட்க முயற்சித்தும் எதுவும் நடக்காத பட்சத்தில், இச்சம்பவம் பிறருக்கும் முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எண்ணி, தான் நீதிமன்ற வழக்கை தொடுத்திருப்பதாக அவர் குறிப்பிட்டார்.
40 ஆண்டுகளாகக் கண்டு கொள்ளாத பால்ய நண்பர்கள், திடீரென புலனக் குழு தொடங்கி உறவு புதுப்பிக்கத் தொடங்கினால், ஒரு கனம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.
“எல்லா நண்பர்களும் அப்படி இருந்துவிட மாட்டார்கள்தான்! எனினும், பணப் புழக்கம் எனும் வரும் போது, அதீத எச்சரிக்கையுடன் இருப்பது நல்லது. அதற்கு நானே ஓர் எடுத்துக்காட்டு! அதனால்தான், இது பொதுவில் அனைவருக்கும் தெரிய வேண்டும்; அதன் வழி ஒரு விழிப்புணர்வும் வர வேண்டும் என்பதற்காக, நான் நீதிமன்றம் வரை வந்துள்ளேன்” என ஒரு சமூகச் சேவையாளருமான சந்திரராஜன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

