
கோலாலம்பூர் ஜூலை 29-
நாட்டின் மையப் புள்ளியாக விளங்கும் கோலாலம்பூர் மாநகரம் செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பத்தின் துணையோடு ஆற்றல் மிக்க மாநகரமாக மாறி வருவது பாராட்டுக்குறியது என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார்.
அதற்கான அத்துணை முயற்சிகளையும் கோலாலம்பூர் மாநகர மன்றம் எடுத்து வருவது பாராட்டப்பட வேண்டிய ஒன்று என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் கூறினார்.
நாடு இலக்கவியல் தொழில் நுட்பத்தில் அதிவேக வளர்ச்சி கண்டு வருவதை நாம் மறுக்க இயலாது.
அதற்கும் ஒரு படி மேலாக சரியான திட்டமிடலும், முறையான கட்டமைப்பும், செயல்திட்டமும் இருக்கும் பட்சத்தில் மக்கள் எதிர்பாரா நன்மைகளை அடைய முடியும்.
நமது நாட்டில் இலக்கவியல் தொழில் நுட்ப வளர்ச்சி என்பது வெறும் பேசுபொருளாக மட்டும் தேங்கி நிற்காமல், நனவாகி வருகிறது.
Kuala Lumpur Command & Control Centre (KLCCC) எனப்படும் கோலாலம்பூர் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்தின் செயற்கை நுண்ணறிவின் துணையோடு இயக்கப்படும் முக்கிய பாதுகாப்பு அம்ச அன்றாட நடைமுறைகளை அமைச்சர் கோபிந்த் சிங் நேரடியாகக் கண்காணித்தார்.
கோலாலம்பூர் கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு மையத்திலிருந்தே, தூரத்தில் நடக்கும் குற்றங்களைக் கண்காணித்து, தவறிழைப்பவர்களை உடனடியாக கண்டிக்கவோ, தண்டிக்கவோ இயலும்.
இதில் ஒரு பகுதியாக கோலாலம்பூர் முக்கிய வட்டாரங்களில் வாகன நெரிசலைக் கண்காணிக்கவும், சாலை போக்குவரத்து குற்றங்களை கண்காணிக்கவும், மக்களின் பாதுகாப்பை உறுதிபடுத்தவும் செயற்கை நுண்ணறிவு துணை கொண்டு 5,000 மறைகாணிகள் இயங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இது காவல்துறையினர் மற்றும் நகராண்மைக் கழக அதிகாரிகளின் சுமையை குறைத்திருப்பதோடு, கோலாலம்பூரில் புழங்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்கிறது. அதோடு செயற்கை செயற்கை நுண்ணறிவின் துணை கொண்டு, எதிர்கொள்ளவிருக்கும் பிரச்சனைகளை ஊகிக்க முடிவதோடு, அதற்கான தீர்வை எட்ட சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவியலும்.
செயற்கை நுண்ணறிவின் வழி பல பிரச்சனைகளுக்கு துரித தீர்வு காண இயலும்.
அதோடு குறித்த நேரத்தில் குற்றவாளிகளைக் கண்டு பிடிக்கவும் செயற்கை நுண்ணறிவு பெரும் பங்காற்றுகிறது.
இதன் வழி பல குற்றச் செயல்களை தடுத்து நிறுத்த முடிவதோடு, குற்றங்களில் ஈடுபடுவோர் எண்ணிக்கையையும் குறைக்க முடியும்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழி, கோலாலம்பூர் மாநகரத்தின் முக்கிய வசதிகள் மற்றும் சேவைகளின் நவீனமயமாக்குதலையும், திறனின்மையைக் குறைக்கும் முயற்சிகளையும் விரைவுபடுத்துகிறது.
இது கோலாலம்பூர் குடியிருப்பாளர்களுக்கான வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தி, பாதுகாப்பான, வசதியான மற்றும் திடமான வாழ்க்கைச் சூழலை உருவாக்குகிறது
DBKL முனைந்திருக்கும் Digital Twin- மெய்நிகர் மாதிரி சோதனையானது கோலாலம்பூர்” மாநகரத்தின் இயக்கங்களை நேரடியாகவும் மற்றும் பகுப்பாய்வு செய்வதற்கும் உதவும் மெய்நிகர் பிரதியாகும்.
இது திட்டமிடல், அவசர நிலை ஏற்பாடுகள் மற்றும் வள மேலாண்மையை சிறப்பாகச் செயல் படுத்த உதவுகிறது.
DBKL-கோலாலம்பூர் மாநகர் மன்றம் தங்களது போக்குவரத்து மேலாண்மையில் AI-செயற்கை நுண்ணறிவு சக்தியை பயன்படுத்துவதன் வழி, இலக்கவியல் மாற்றத்தை வலுப்படுத்தி வருகிறது.
நேரடி கேமரா காட்சிகள் மற்றும் நுண்ணறிவு பகுப்பாய்வுகளை பயன்படுத்தி, போக்குவரத்து நிலை, விபத்துகள் அல்லது அனுமதி இல்லாத நிறுத்தங்கள் போன்றவை கண்டறியப்படுகின்றன.
தேவைக்கேற்ப போக்குவரத்து சமிஞ்சை விளக்குகள், தானாகவே ஒழுங்குபடுத்தப்பட்டு, முக்கிய சந்திப்புகளில் போக்குவரத்து ஒழுங்கை மேம்படுத்துகின்றன.
வரும் 2025 செப்டம்பர் 17 முதல் 19 வரை நடைபெறவுள்ள Smart City Expo Kuala Lumpur 2025 (SCEKL 2025) நடைபெறும் நிலையில், இந்த மாநாட்டை, மலேசிய இலக்கவியல் பொருளதார கழகம் Malaysia Digital Economy Corporation (MDEC) மற்றும் தேசிய இலக்கவியல் நிறுவனம் Digital Nasional Berhad (DNB) ஆகிய முக்கிய நிறுவனங்கள் இணைந்து நடத்துகின்றன.
இது உலகிலேயே மிகப்பெரிய நகர நவீனத்துவ மாநாடு “Smart City Expo World Congress (SCEWC)” நிகழ்ச்சியின் ஒரு அங்கமாகும் என அவர் கூறினார்.

