இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயர 13-ஆவது மலேசிய பெருந்திட்டம் உதவ வேண்டும்: -டான்ஸ்ரீ விக்னேஸ்வரன்!

கோலாலம்பூர் ஆக 1-
ஒற்றுமை அரசாங்கத்தின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் அறிவித்த 13ஆவது மலேசிய பெருந்திட்டம் தொடர்பில் ம இ கா சார்பில் ஆதரவையும் கோரிக்கையையும் ஒருசேர வெளிப்படுத்தி இருக்கிறார் அதன் தேசியத் தலைவர் டான்ஸ்ரீ டாக்டர் ச. விக்னேசுவரன்.

மஇகா-வின் பரிந்துரையை ஏற்று இந்தியர் பெருந்திட்டம் 2.0ஐயும் இன்று அறிவிக்கப்பட்ட மலேசிய பெருந்திட்டத்தில் பிரதமர் இணைத்து கொண்டிருப்பது வரவேற்கக் கூடியது.

இந்திய ஆலோசனை மன்றம்-ICC முன்னெடுத்த இந்த இந்தியர் பொருளாதார பெருந்திட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் பொருளாதார திட்ட பிரிவிடம் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதன் அடிப்படையான அம்சம், இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைத்தரம் உயர வேண்டும் என்பதுதான்.

அதன் அடிப்படையில், அறிவிக்கப்பட்ட 13ஆவது பெருந்திட்டத்தில் பிரதமர் இதை இணைத்துக் கொண்டிருப்பதை மஇகா பெரிதும் வரவேற்கிறது.

இந்திய சமுதாயத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுவதுடன் மாணவர் சமுதாயத்தின் மறுமலர்ச்சியும் இதில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள பட்டுள்ளது.

குறிப்பாக, கல்வி மறுமலர்ச்சியுடன் STEM எனப்படும் அறிவியல் தொழில்நுட்பம் பொறியியல் மற்றும் கணித பிரிவுகளில் இந்திய மாணவர்களின் ஆற்றலை மேம்படுத்துவது, TVET எனப்படும் தொழில்நுட்பம்- தொழில்திறன் சார்ந்தபயிற்சிக்கு முன்னுரிமை குறித்தெல்லாம் மேற் சொன்ன இந்தியர் பெருந்திட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

வீட்டு வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்பு குறித்த கவனமும் இந்திய சமுதாயத்தின்மீது செலுத்தப்பட வேண்டும்.
குறிப்பாக இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து கண்காணிக்கவும் மேம்படுத்தவும் மித்ராவுடன் இன்னொரு சிறப்பு பிரிவையும் அரசு ஏற்படுத்த வேண்டும். மேலும், இந்தியர்களின் சமூக பொருளாதார வளர்ச்சியை இலக்காகக் கொண்ட இந்தியர் ஆலோசனை மன்றம், அமைச்சரவைக்கு பரிந்துரை செய்யக்கூடிய அமைப்பாக அங்கீகரிக்கப்பட வேண்டும்.

எல்லாவற்றுக்கும் மேலாக தேசிய அளவில் 38 இடங்களில், குறிப்பாக இந்தியர்கள் மிகப் பெரும்பான்மையாக வசிக்கின்ற இடங்களில் சமூக பொருளாதார மேம்பாட்டு பிரிவை அரசு நிறுவ வேண்டும்.

இத்தகைய பிரிவுகளில் நகராட்சி – ஊராட்சி மன்றங்களின் சார்பில் அரசு பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவற்றின் வளர்ச்சியும் மேம்பாடும் மாவட்ட அளவில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும்.

இத்தகைய முன்னெடுப்புகள் 13ஆவது மலேசியத் திட்டத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ள இந்தியர் பெருந்திட்டம் 2.0, அதன் இலக்கை அடைய துணை புரியும்.

இதன் தொடர்பில் அரசத் தரப்புடன் முழு ஈடுபாட்டுடன் இணைந்து செயல்படவும் உரிய பங்களிப்பை வழங்கவும் ஆலோசனை தெரிவிக்கவும் மஇகா எப்பொழுதும் தயாராக இருக்கும் என்று இன்றைய 13 வது மலேசியத் திட்டம் தொடர்பில் டான்ஸ்ரீ டத்தோஸ்ரீ ச விக்னேஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles