முதியோர்கள் மற்றும் உடல் ரீதியாக சவாலானவர்களுக்கு அரசு மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைக்கு முதலிடம்! சமூக சேவகர் டத்தோ பி.முருகையா வலியுறுத்து

பினாங்கு, ஆக 6-
மலேசியாவில் மூத்த குடிமக்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதை
சமீபத்திய புள்ளி விவரங்கள் தெளிவுபடுத்தியிருக்கும் நிலையில்,
இவர்களில் பற்பல உடல் உபாதைகளால் உடனடி மருத்துவ சிகிச்சைக்கு உள்ளாகியிருப்பவர்களின் பட்டியலும் நீண்டு வரும் பட்சத்தில், அத்தகையோருக்கு முன்னுரிமை வழங்கி சிகிச்சையளிப்பதில், பொது மருத்துவமனைகளும் அரசு
சுகாதார மருத்துவமனைகளும் முக்கியத்துவம் அளித்து தாராளமுடன் முன்வர வேண்டுமென்று, பினாங்கு இந்து இயக்கத் தலைவர் டத்தோ பி.முருகையா உருக்கமுடன் கோரிக்கை விடுத்துள்ளார்.

அண்மைய சில காலமாக அரசு மருத்துவமனைகளில் மூத்த குடிமக்களுக்கும் உடல் ரீதியாக அவசர சிகிச்சைகளுக்கு உள்ளாகியிருப்பவர்களுக்கும் சிறந்த
சேவைகள் வழங்கப்படும் விவகாரம் மகிழ்ச்சியை அளித்தாலும், அவசர
ரீதியாக உடனடி சிகிச்சைக்கு நிர்ப்பந்திக்கப்படும் மூத்த குடிமக்களுக்கு முதற் சேவைகள் வழங்கப்படாமல் காலம் தாழ்த்தப்படும் நிலைமை மாற
வேண்டுமெனவும், இந்த விவகாரத்தில் சுகாதார அமைச்சு கூடுதல் கவனம் செலுத்தி,
மூத்த குடிமக்களுக்கான முக்கிய சிகிச்சைகளுக்கு முன்னுரிமை வழங்க முனைப்பு
காட்டுதல் அவசியமென்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

அரசு பொது மருத்துவமனைகளில் முதலுதவிச் சேவை அல்லது
வாடிக்கையாளர் சேவையை நாடுகின்ற முதியோர் பலருக்கு, 
அங்கு சேவகம் புரிய நியமனம் கண்டிருக்கும் மருத்துவ ஊழியர்களால் அலட்சியமும்
பாராபட்சமும் காட்டப்படுகின்ற அவல நிலைகளால், அநேகர்
திண்டாடும் கதியை எதிர்கொள்ளும் பரிதாபம், அவ்வப்போது நிகழ்வது
கண்கூடான காட்சிகளாகி விட்டதாகவும், இத்தகையச் சூழலில்
எங்கு செல்வது, எவரை அணுகுவது என்று, முதிய நோயாளிகள் பலர்
அல்லலாடுகின்ற சம்பவங்கள் அதிகரித்து வருவதாகவும், முருகையா வேதனை தெரிவித்துள்ளார்.

அரசு மருத்துவமனைகளில் அத்தகு நோயாளிகள் தத்தம் பெயர்களை
பதிந்து கொண்ட பின்னர், சரியான வழிகாட்டல் இல்லாது, அவர்கள்
சிகிச்சை பெற வேண்டிய பிரிவுகளுக்குச் செல்வதில்
குழப்பமடைகின்ற வேளையில், மருத்துவமனை தரப்பில்
ஊழியர்களின் துணை இல்லாத பட்சத்தில், அவர்கள் நோயின்
இன்னல்களை சகியாமலும் செய்வதறியாமலும் திண்டாடுகின்ற
நிலைமை சொல்லொணாத் துயரமென்று சுட்டிக் காட்டிய அவர்,
இதனை கருத்தில் கொண்டு, அரசு பொது மருத்துவமனைகளில்
”முதியோர் நலன் பேணும் சிறப்பு சேவைப் பிரிவு” என்ற ஒரு
மையத்தை ஏற்படுத்த, சுகாதார அமைச்சு பரிசீலிக்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles