
7 ஆகஸ்டு 2025-
2026ஆம் ஆண்டு சிலாங்கூரில் நடக்கவிருக்கும் சுக்மா 2026 பதக்க விளையாட்டுப் போட்டியில் சிலம்பம் இடம் பெறாது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு தெரிவித்துள்ளது குறித்து மலேசிய இந்து சங்கம் தனது வருத்தத்தையும் அதிருப்தியையும் தெரிவித்துக் கொள்கிறது.
சிலம்பம் என்பது வெறும் போட்டி விளையாட்டு மட்டுமல்ல. அது மலேசியாவாழ் இந்திய சமூகத்தின் நூற்றாண்டுக்கால பாரம்பரியத்தின் வீர கலை. சுக்மாவின் அடிப்படை நோக்கமே விளையாட்டுகளை அங்கீகரித்தல் தான். ஆனால் அதன் நோக்கத்திற்கு எதிராக சிலம்பத்தைப் பதக்கப் பட்டியலிருந்து நீக்கியுள்ளது ஏற்றுக் கொள்ள முடியாதது.
முக்கிய பிரச்சனைகள்:
வாக்குறுதி மீறப்பட்டுள்ளது : சிலம்பத்தை பதக்கப் போட்டியாக சேர்த்துக் கொள்ளப்படும் என்ற அரசாங்கத்தின் வாக்குறுதி மீறப்பட்டுள்ளதோடு அதற்கு தகுந்த விளக்கமும் தரப்படவில்லை. இந்த பொறுப்புணர்வு இல்லாமை நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாகிறது.
விளையாட்டு வீரர்கள் மீதான தாக்கம்: பல ஆண்டுகளாக பயிற்சி பெற்ற அர்ப்பணிப்புள்ள இளம் விளையாட்டு வீரர்கள், தேசிய அளவில் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் குறைந்து வருவதால், நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர்.
கலாச்சார தவிர்ப்பு: இந்த முடிவு மலேசியாவின் தேசிய விளையாட்டுத் துறையில் பன்முக கலாச்சாரம் மற்றும் சமமான பிரதிநிதித்துவத்திற்கான அர்ப்பணிப்பு குறித்த கவலைகளை உண்டாக்குகிறது.
மலேசியாவில் இந்துக்களை முன்னிலைப்படுத்திய இந்திய சமூகத்தைப் பிரதிநிதிக்கின்ற மலேசிய இந்து சங்கம் பின்வரும் கோரிக்கைகளை முன்வைக்கிறது:
வெளிப்படையான விளக்கம் : சுக்மா 2026 பதக்க விளையாட்டுப் பட்டியலில் இருந்து சிலம்பம் நீக்கப்பட்டதற்கான அதிகாரப்பூர்வ விளக்கத்தை விளையாட்டுத் துறை வழங்க வேண்டும்.
உடனடியாக மீண்டும் அங்கீகரித்தல் : முந்தைய வாக்குறுதிகளை மதிக்கவும், சுக்மாவின் மதிப்புகளை நிலைநிறுத்தவும் சிலம்பத்தை பதக்க விளையாட்டாக மீண்டும் நிலைநிறுத்த வேண்டும்.
ஆக்கபூர்வமான ஈடுபாடு : அனைத்து கலாச்சார விளையாட்டுகளையும் நியாயமாகவும், உள்ளடக்கியதாகவும் நடத்துவதை உறுதி செய்வதற்கு, இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சு மலேசிய சிலம்ப கழகம் போன்ற முதன்மை இயக்கங்களுடன் ஒரு திறந்த உரையாடலை நடத்த வேண்டும் என இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
சிலம்பம் ஒரு விளையாட்டாக மட்டுமல்லாமல், மலேசியாவின் பன்முகத்தன்மை கொண்ட கலாச்சார அடையாளத்தின் ஓர் அங்கமாக விளங்க சுக்மாவில் சரியான இடத்தைப் பெற வேண்டும் என மலேசிய இந்து சங்கம் கேட்டுக் கொள்கிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஶ்ரீகாசி சங்கபூசன் தங்க. கணேசன் AMN.,ASA
தேசியத் தலைவர்,
மலேசிய இந்து சங்கம்

