
புத்ரா ஜெயா, ஆக 8-
இன்று வெள்ளிக்கிழமை நடைபெறும் அமைச்சரவை கூட்டத்தில் சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற வேண்டும் குறித்து பேசுவேன் என்று டிஜிட்டல் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தெரிவித்தார்.
Selangor இல் நடைபெறவுள்ள SUKMA-2026 மலேசிய விளையாட்டுப் போட்டிகளில் இருந்து இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம் நீக்கப்பட்டதன் காரணத்தால் ஏற்பட்ட விவாதங்கள் மற்றும் அது தொடர்பான விளையாட்டாளர்களின் கவலை குறித்து நான் அறிகிறேன்.
இது குறித்து, நான் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர், மாண்புமிகு ஹன்னா இயோ, மற்றும் சிலாங்கூர் மந்திரி பெசார், மாண்புமிகு டத்தோ’ஸ்ரீ அமிருடின் ஷாரி ஆகிய இருவருடனும் இந்தப் பாரம்பரிய விளையாட்டின் அவசியம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன்.
இந்த விவகாரம் தொடர்பாக என்னிடம் கவலை தெரிவித்த பலரின் கருத்துக்களையும், வாதங்களையும் நான் அவ்விருவரிடமும் தெரிவித்தேன்.
மேலும் இந்த முடிவு மாற்றப்பட வேண்டும் என்றும் இந்தியர்களின் பாரம்பரிய விளையாட்டான சிலம்பம், சுக்மா போட்டிகளில் இடம்பெற வேண்டும் எனும் எனது நிலைப்பாட்டை அவ்விருவரிடமும் விளக்கினேன்.
இந்தச் சர்ச்சை குறித்து இன்று அமைச்சரவைக் கூட்டத்திலும் நான் எனது நிலைப்பட்டை விவாதிப்பேன். இந்தப் பிரச்சனைக்கு விரைவில் தீர்வு காணப்படும் என நான் நம்புகிறேன் என்று ஜசெக தலைவருமான அவர் சொன்னார்.

