
ஷா ஆலம், ஆக 7-
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பத்தை சிலாங்கூர் சுக்மா போட்டியில் இருந்து நீக்கியது பெரும் அநியாயம் என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் கூறினார்.
சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவராக இருக்கும் என்னிடம் உங்கள் மாநிலத்தில் அடுத்த ஆண்டு நடக்கும் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் போனது ஏன் என்று பலர் கேள்வியை கேட்கிறார்கள்.
சிலாங்கூர் மாநில சுக்மா உயர் கவுன்சில் குழுவில் நாங்கள் இடம் பெறவில்லை.
ஆனால் பல பாரம்பரிய தற்காப்பு கலை போட்டிகள் சுக்மாவில் இடம் பெற்றுள்ள வேளையில் சிதம்பத்தை நீக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஆண்டு சரவாக் மாநிலத்தில் நடைபெற்ற சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெற்றது.
அந்த போட்டி விளையாட்டை காண வந்த இளைஞர் விளையாட்டு துறை அமைச்சர் ஹன்னா இயோ, சுக்மா போட்டியில் சிலம்பம் மற்றும் கபடி தொடர்ந்து இடம் பெறும் என்று வாக்குறுதி அளித்தார்.
இன்று நடப்பது பெரும் அநியாயமாக உள்ளது.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையை ஒழிக்க சதியா என்ற கேள்வி எழுகிறது.
சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் போன விவகாரம் இப்போது இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளதை இளைஞர் விளையாட்டு துறை அமைச்சு, தேசிய விளையாட்டு மன்றம் மற்றும் சுக்மா போட்டி உயர் கவுன்சில் குழு உணர வேண்டும்.
இன்னும் காலதாமதம் இருப்பதால் சம்பந்தப்பட்ட தரப்பினர், அதிகாரிகள் மறுபரிசீலனை செய்து சிலம்பத்தை மீண்டும் சுக்மாவில் இணைக்க ஆவன செய்ய வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

