
ஈப்போ ஆக 9-
வரும் 2026 சிலாங்கூர் சுக்மா போட்டியில் சிலம்பம் நிலை நிறுத்தப்படுவதற்கு சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு கூட்டம் முடிவு செய்துள்ளது பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று பேராக் மாநில மாலிம் நாவர் சட்டமன்ற உறுப்பினர் பவானி வீரய்யா தெரிவித்தார்.
சுக்மா போட்டியில் சிலம்பம் இடம் பெறாமல் போனது நாட்டில் குறிப்பாக இந்திய சமுதாயத்தின் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த தருணத்தில் சிலாங்கூர் மாநில ஆட்சிக் குழு கூட்டத்தில் சுக்மா போட்டியில் சிலம்பம் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்று ஆட்சிக் குழு உறுப்பினர் பாப்பா ராயுடு குரல் கொடுத்துள்ளார்.
இவரின் கோரிக்கை ஏற்றுக் கொண்ட சிலாங்கூர் மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிரூடின் சாரி மற்றும் சிலாங்கூர் மாநில இளைஞர் விளையாட்டு துறை ஆட்சிக் குழு உறுப்பினர் நஜ்வான் சுக்மா போட்டியில் சிலம்பம் நிலை நிறுத்தப்படுவதற்கு ஆதரவு தெரிவித்து இருப்பது மிகவும் பாராட்டுக்குரியது.
தமிழர்களின் பாரம்பரிய தற்காப்பு கலையாக விளங்கும் சிலம்பம் தொடர்ந்து சுக்மா போட்டியில் நிலை நிறுத்தப்படுவதற்கு குரல் கொடுத்த அனைத்து தரப்பினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று அவர் சொன்னார்.

