
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் ஆக 11-
பழந்தமிழ் இலக்கியத்தில் மறை நூல் என்று போற்றப்படும் ஒரே நூலான திருக்குறளை குயில் ஜெயபத்தி புத்தக நிறுவனம் மும் மொழியில் மொழிபெயர்த்து இப்பொழுது வெளியீடு செய்யவிருக்கிறது.
பத்து ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகு இந்தப் புத்தகத்தை குயில் ஜெயபக்தி நிறுவனம் வெற்றிகரமாக தயாரித்துள்ளது என்று குயில் ஜெயபக்தி நிறுவனத்தின் உரிமையாளர் டத்தோ டாக்டர் கு செல்வராஜ் தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற நூலாக திருக்குறள் விளங்குகிறது.
ஏற்கெனவே தமிழ் மொழியில் திருக்குறள் புத்தகம் உள்ளது.
இப்போது மலாய் மற்றும் ஆங்கில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மும்மொழியில் திருக்குறள் புத்தகம் தயாராகி உள்ளது.
மலாய் ஆங்கில மொழியினரும் குறிப்பாக மாணவர்கள் திருக்குறளைப் படித்து அதன் அர்த்தத்தை புரிந்து கொள்ளும் வகையில் இந்தப் புத்தகம் தயாராகி உள்ளது.
மிக விரைவில் மும்மொழி திருக்குறள் புத்தகம் மிகப்பெரிய அளவில் வெளியீடு காணும் என்று அவர் சொன்னார்.
திருக்குறள் (Tirukkural), சுருக்கமாக குறள் (Kural), ஒரு தொன்மையான தமிழ் மொழி அற இலக்கியமாகும்.
சங்க இலக்கிய வகைப்பாட்டில் பதினெண்கீழ்க்கணக்கு எனப்படும் பதினெட்டு நூல்களின் திரட்டில் இருக்கும் இந்நூல் குறள் வெண்பா என்னும் பாவகையினாலான 1,330 ஈரடிச் செய்யுள்களைக் கொண்டது.
இந்நூல் முறையே அறம், பொருள், இன்பம் ஆகிய மூன்று தொகுப்புகளைக் கொண்டது.
இது, அடிப்படையில் ஒரு வாழ்வியல் நூல் ஆகும். மாந்தர்கள் தம் அகவாழ்விலும் புற வாழ்விலும் நலமுடன் வாழ்வதற்குத் தேவையான அடிப்படைப் பண்புகளை விளக்குகிறது.
இந்நூல் அறநெறிகளைப் பற்றிய உலகின் மிகச்சிறந்த படைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.
பொதுத்தன்மைக்கும் மதச்சார்பற்ற தன்மைக்கும் பெயர் பெற்றது.
இதனை இயற்றியவர் திருவள்ளுவர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

