அறிவார்ந்த சமூகத்தின் வேர்கள் ஆசிரியர்கள் – சிவநேசன் புகழாரம்!!

சுங்கை,ஆக12: ஒரு நாட்டின் எதிர்காலமும் நம்பிக்கையான தலைமுறைகளையும் உருவாக்கும் வித்தகர்களும் ஆசிரியர்களே என்று நினைவுறுத்திய ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் அறிவார்ந்த சமூகத்தின் வேர்கள் ஆசிரியர்கள் எனவும் புகழாரம் சூட்டினார்.

ஆசிரியர்களின் அர்ப்பணிப்பும் தியாகமும் காலத்தின் பெருமைமிகு வரலாற்று சுவடுகள்.அது ஒவ்வொரு மனிதனின் வாழ்விலும் அவனை உயர்த்திய தன்னலம் கருதாத ஏணிகள்.ஆசிரியர்களை போற்றும் சமூகமும் மதிக்கும் மாணவர்களும் நிச்சயம் வாழ்வில் நன்நிலையில் உயர்ந்து நிற்பார்கள் என்றார்.

பேரா மாநில மனிதவளம்,சுகாதாரம்,இந்தியர் நல்வாழ்வு மற்று ஒருமைப்பாடுக்கான பொறுப்பாளருமான சிவநேசன் வளமான நாட்டிற்கும் மேன்மைமிகு மக்களுக்கும் ஆசிரியர்களின் பங்களிப்பு அளப்பரியது என்றும் குறிப்பிட்டார்.

பத்தாங் பாடாங் மாவட்ட நிலையிலான நனிச் சிறந்த சேவைக்கான ஆசிரியர் விருது வழங்கும் விழாவில் சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசன் இதனை தெரிவித்தார்.

மேலும்,பேரா மாநிலம் தொடர்ந்து தொழிற்துறை கல்வியில் தீவிரம் காட்டி வரும் வேளையில் ஆசிரியர்கள் இதுகுறித்த ஆழமான பார்வையையும் தெளிவையும் பெற்றிருக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர் கல்வியில் சிறந்த விளங்க முடியாத மாணவர்களைத் தொழிற்திறன் கல்வியில் தங்களின் எதிர்காலத்தை அமைத்து கொள்ள ஆசிரியர்கள் விவேகமான முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

கல்வி விவகாரத்தில் பேரா மாநில அரசும்,பிரதமர் தலைமையிலான மத்திய அரசும் விரிவான இலக்கை கொண்டிருப்பதாக நினைவுறுத்திய சிவநேசன் கல்வி மட்டுமே ஒரு மனிதனின் எதிர்காலத்தை எல்லா நிலையிலும் மாற்றும் திறனையும் ஆற்றளையும் கொண்டிருப்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பத்தாங் பாடாங் மாவட்டத்தை சார்ந்த ஆரம்பப்பள்ளி மற்றும் இடைநிலைப்பள்ளிகளைச் சேர்ந்த சுமார் 223 ஆசிரியர்களுக்கு சேவை,புத்தாக்கம் மற்றும் தோக்கொ குரு ஆகிய விருதகள் வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் வட்டாரத் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர்களும் கலந்து கொண்ட வேளையில் மாவட்ட கல்வி இலாகா அதிகாரி ராய்ஹானுல் ஹஸ்மி வரவேற்புரையும் ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles