
பீடோர்,ஆக15: அனைத்துலகப் போட்டியில் பங்கெடுக்கவிருக்கும் பீடோர் ஷேக் அப்துல் கனி இடைநிலைப்பள்ளி மாணவியான பவித்ரா த/பெ துரைராஜ்க்கு சுங்கை சட்டமன்ற உறுப்பினர் அ.சிவநேசன் அம்மாணவிக்குத் தேவையான பல்வேறு உதவிகளை வழங்கினார்.
செயற்கை நுண்ணறிவு,அனிமெஷன் உட்பட பல்வேறு சவால்களை எதிர்கொள்ளும் போட்டிகளில் மாற்றுத்திறனாளி பிரிவில் மலேசியாவை பிரதிநிதித்து தேர்வு செய்யப்பட்ட 8 மாணவர்களில் பவித்ரா ஒருவர் மட்டுமே இந்திய மாணவி என்பது குறிப்பிடத்தக்கது.
மாவட்ட,மாநில நிலையில் தன் திறமையால் சரியான இலக்கில் வெற்றி கொண்ட பவித்ரா பின்னர் தேசிய நிலையிலும் இலக்கை எட்டி வருகின்ற அக்டோபர் மாதம் கொரியாவில் நடைபெறவிருக்கும் அனைத்துலக நிலையிலான போட்டியில் பங்கெடுக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில்,நடுத்தர குடும்பச் சூழலை கொண்ட பவித்ராவிற்கு மாண்புமிகு சிவநேசன் மடிக்கணினி,விவேக கைபேசி,கேமரா,ஒலிவாங்கி என சுமார் வெ.5000 மதிப்பிலான அடிப்படை தேவைக்கான பொருட்களை வழங்கினார்.
மேலும்,இம்மாணவி அக்டோபர் மாதம் செல்லவிருப்பதால்,கொரியாவின் காலநிலை குளிச்சியாக இருப்பதை கவனத்தில் கொண்ட மாநில இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் பருவநிலைக்கான உடைகளை வாங்கவும் மற்ற அடிப்படை தேவைகளை அம்மாணவி வாங்கிக் கொள்ளவும் பயண்ச் செலவிற்காகவும் வெ.1000ஐ நிதியுதவியாகவும் வழங்கினார்.
இம்மாணவியின் திறனையும் ஆற்றலையும் பாராட்டிய சிவநேசன் இம்மாணவியின் கல்வி வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் தேவையான உதவிகளை வழங்கிட தயராகவே இருப்பதாகவும் கூறினார்.மேலும்,வழங்கப்பட்ட அனைத்து உதவிகளும் எஸ்.பி.எம் தேர்விற்கு பின்னர் அம்மாணவி கல்லூரி உட்பட உயர்கல்வி கூடங்களில் பயன்படுத்துவதற்கும் சாத்தியமானதாக அமைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.
மேலும்,கல்வியில் சாதிக்கவும் முன்னேறவும் எதுவும் தடையில்லை.ஆர்வமும் இலக்கை நோக்கி பயணிக்கும் தேடலும் இருந்தால் யார் வேண்டுமானாலும் சாதிக்கலாம் என்பதற்கு பவித்ரா ஓர் எடுத்துகாட்டு எனவும் கூறிய அவர் மாற்றுத்திறனாளியாக இருந்தாலும் இம்மாணவியின் எதிர்காலம் நம்பிக்கையான இலக்கில் முன்னோக்கி நகர்வதாகப் பெருமிதமாகக் கூறினார்.
கணவரை இழந்து தனது மூன்று பிள்ளைகளையும் நன்நிலையில் வளர்த்து வரும் பவித்ராவின் தாயார் கிடைக்கும் சொக்சோ இழபீடு நிதியிலும் பகுதி நேர வருமானத்திலும் குடும்பத்தை வழிநடத்தி வரும் நிலையில் சிவநேசனின் இவ்வுதவி அம்மாணவிக்கு மட்டுமின்றி அக்குடும்பத்திற்கே பெரும் உதவியாகவும் ஆறுதலாகவும் இருந்ததாக அம்மாணவியின் தாயார் திருமதி.நளினி இராமன் தெரிவித்தார்.
மாண்புமிகு சிவநேசனின் இவ்வுதவி தன் மகளின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு விதையாக அமைந்திருப்பதாகவும் அவரது ஆதரவும் பங்களிப்பும் தன் மகளின் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு ஒளியாய் அமைந்திருப்பதாகவும் கூறினார்.அதேவேளையில்,தன் இவ்வுதவிகளைச் செய்த மாண்புமிகு சிவநேசன் அவர்களுக்கு நன்றி பகிர்வதாக தனக்கே உரிய புன்னகையோடு மாணவி பவித்ரா குறிப்பிட்டார்.
மாணவி பவித்ராவிற்கு மாண்புமிகு சிவநேசன் இவ்வுதவிகளை வழங்கிய போது ஷேக் அப்துல் கனி இடைநிலைப்பள்ளியின் பள்ளி முதல்வரும் உடன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

