

ஈப்போ, ஆக.19: இங்குள்ள தாசேக் சிமிண்ட் தொழிற்சாலை பல்லாண்டுகளாக இவ்விடத்தில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இத்தொழிற்சாலையில் 450 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அவற்றில் 238 பேர் தொழிற்சங்க உறுப்பினர்கள். தற்போது இத்தொழிற்சாலையில் 6 ஆய்வுக்கூடங்கள் உள்ளன. அவற்றில் 4 ஆய்வுக்கூடங்களை மூடிவிட்டு வெறும் 2 மட்டுமே செயல்பட நிர்வாகம் முடிவெடுத்துள்ளது.
இதனால், ஆள்பலம் அல்லது தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைப்பு நடவடிக்கைகள் ஏற்படலாம் என்ற புகாரின் அடிப்படையில் இந்த நிறுவனத்தின் நிர்வாகத்தை நேரில் வந்து சந்தித்ததாக பேராக் மாநில மனித வளம், சுகாதாரம், ஒற்றுமை மற்றும் இந்திய சமூகநலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறினார்.
இத்தொழிற்சாலை தற்போது 6 ஆய்வுக்கூடங்களில் 33 தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.
அத்துடன், இத்தொழிற்சாலையில் வேலை செய்யும் அனைத்து தொழிலாளர்களும் இந்நாட்டை சேர்ந்தவர்கள்.
அந்நிய நாட்டு தொழிலாளர்கள் இங்கு வேலை செய்யவில்லை என்று அவர் குறிப்பிட்டார்.
இந்த ஆய்வுக்கூடங்களிலிருந்து 4 ஆய்வுக்கூடங்களை மூடிவிட்டு, இரு ஆய்வுக்கூடங்கள் மட்டுமே செயல்படுத்த நிர்வாகம் முடிவெடுத்துள்ளது
இதனால், சுமார் ஐவர் வேலையை இழக்கும் நிலைப்பாடு உருவாகி வருகிறது. அதற்கு எதிர்ப்பாக இங்குள்ள தொழிற்சங்கவாதிகள் காலையிலும் மாலையிலும் அமைதி மறியலில் ஈடுபட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார்.
அதுமட்டுமின்றி, ஆய்வுக்கூடங்களில் தொழிலாளர்களாக பணியாற்றிய ஒரு தரப்பினருக்கு அதிகாரியாக பதவி உயர்வு வழங்க நிர்வாகம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அப்படி தொழிலாளர்கள் அதிகாரியாக பணி உயர்வு கிடைக்கப்பெற்றால் அவர்கள் தொழிற்சங்க உறுப்பினராக இருக்க முடியாது என்று சட்டவிதிமுறைகள் கூறுகின்றன.
இதனால் தொழிற்சங்க தலைவரே இந்த பாதிப்பை எதிர்நோக்குகிறார் என்று அவர் கோடிக்காட்டினார்.
இவ்விவகாரம் தொடர்பாக தாசேக் சிமிண்ட் தொழிற்சாலையின் நிர் வாகத்தினர் அவர்களின் திட்டங்கள் குறித்து மறுபரிசீலனை செய்வதுதான் உத்தமம்.
இல்லையேல் இவ்விவகாரம் தொடர்பாக மனிதவள அமைச்சின் தலையீடு மற்றும் தொழிலாளர் நீதிமன்ற வழக்கு போன்ற விவகாரங்களை சந்திக்க வேண்டிய நிலைப்பாடு ஏற்படலாம் என்று அவர் சொன்னார்.
இச்சந்திப்பில் தாசேக் சிமெண்ட் தொழிற்சாலையின் உயரிய அதிகாரிகள், பேராக் மாநில ஆள்பல இலாகாவின் அதிகாரிகள், மனிதவள இலாகாவின் இயக்குநர் மற்றும் அரசாங்க அதிகாரிகள் கலந்துக் கொண்டனர்.

