
சொஸ்மா சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நூறுக்கும் மேற்பட்ட இந்திய இளைஞர்களின் குடும்பங்கள் கண்ணீரில் பரிதவித்துக் கொண்டிருக்கிறது.
இவர்களின் குடும்பங்கள் வருமானத்தையும் நிம்மதியையும் இழந்து ஒவ்வோர் நாளும் பிள்ளைகளுடன் நகர வேதனையை அனுபவித்து வருகிறார்கள்.
இந்திய சமுதாயத்திற்கு சோதனை வரும் பொதெல்லாம் துணிந்து குரல் கொடுத்து வருபவர் பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி ஆவார்.
இதற்காக அவர் எதிர்நோக்கிய மிரட்டல்கள் எதிர்ப்புகள் ஆயிரம் ஆயிரம்.
இருப்பினும் தனது இனத்திற்காக சோரம் போகாமல் தொடர்ந்து துணிவுடன் போராடிக் கொண்டிருக்கும் இவரை காண நேற்று சொஸ்மா கைதிகளின் குடும்பங்கள் பிள்ளை குட்டிகளுடன் கண்ணீரோடு பினாங்கு கொம்தார் கட்டடத்தை நோக்கி படையெடுத்த சம்பவம் நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேராசிரியர் டாக்டர் இராமசாமி குரல் கொடுத்தால் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அரசாங்கம் காது கொடுத்து கேட்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கையில் சொஸ்மா கைதிகளின் குடும்பங்கள் அவரிடம் உள்ளன.
இவர்களின் கண்ணீர் கதைகளை தனக்குரிய பாணியில் உன்னிப்பாக செவிமெடுத்த டாக்டர் பி இராமசாமி சொஸ்மாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களை விடுவிக்க கோரி நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை மேற்கொள்ளப் போவதாக அறிவித்தபோது பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஒரு விடிவுகாலம் பிறக்கும் அறிகுறி தென்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

