
கோலாலம்பூர் செப் 3-
மலேசிய இந்து சங்கம், அனைத்து கோவில்களிலும் நடைபெறும் பூஜைகள், திருவிழாக்கள் மற்றும் ஆன்மிகச் செயல்பாடுகள், ஆகம சாஸ்திரங்களின் அடிப்படையில் நடைபெற வேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.
ஆலயங்கள் எப்போதும் பக்தர்களின் ஆன்மிக முன்னேற்றத்திற்கும், சமூக ஒற்றுமைக்கும், சமய ஒழுக்கத்திற்கும் முன்னுதாரணமாக அமைய வேண்டும்.
அதேசமயம், கோவில்கள் எந்தவிதமான திருவிழாவையும் நடத்தும் போது, மலேசிய அரசின் சட்டங்கள், பாதுகாப்பு விதிமுறைகள் மற்றும் பொது ஒழுங்கை கடுமையாகக் கடைப்பிடிப்பது கட்டாயம்.
காவல்துறை, உள்ளூர் ஆட்சியகம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளிடமிருந்து உரிய அனுமதி பெற்றே பெரிய விழாக்கள், ஊர்வலங்கள் அல்லது பொதுக் கூட்டங்களை நடத்த வேண்டும்.
அனுமதியின்றி நடைபெறும் நிகழ்ச்சிகள், சட்டவிரோதமாக கருதப்படும்.
தீமிதி, காவடி, அன்னதானம் போன்ற சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படும் போது, பாதுகாப்பு ஏற்பாடுகள் முழுமையாக இருக்க வேண்டும்.
கோவில்களில் நடைபெறும் திருவிழாக்கள், சமூகத்தில் நல்லிணக்கத்தையும், மத ஒற்றுமையையும் வலுப்படுத்தும் விதமாக இருக்க வேண்டும்.
சட்டத்திற்கு முரணான எந்தச் செயல்பாடும், இந்து சமயத்தின் நல்லபெயருக்கு கேடு விளைவிக்கும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
சட்டத்தை மீறி நடத்தப்படும் எந்தவிதமான திருவிழாவிற்கும், அதனால் ஏற்படும் பிரச்சினைகளுக்கும், அந்த ஆலய நிர்வாகக் குழு முழுமையாகப் பொறுப்பாகும்.
மலேசிய இந்து சங்கம், இத்தகைய நிகழ்ச்சிகளுக்கு ஆதரவோ அல்லது பாதுகாப்போ வழங்காது.
மலேசிய இந்து சங்கம், அனைத்து கோவில் நிர்வாகிகளும் தங்கள் பொறுப்பை உணர்ந்து, சாஸ்திரத்திற்கும் சட்டத்திற்கும் ஏற்ப விழாக்களை நடத்தினால், அது இந்து சமயத்தின் மகத்துவத்தையும், சமுதாயத்தின் மரியாதையையும் உயர்த்தும் என்று நம்புகிறது.
இந்த அறிவுறுத்தலை அனைத்து ஆலய நிர்வாகிகளும் மிகவும் கவனமாகக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொள்கிறது.
நன்றி. வணக்கம்
என்றும் இறை சேவையில்,
ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் AMN.,ASA.,
தேசிய தலைவர்
மலேசிய இந்து சங்கம்

