சுயத்திறனை கண்டறிந்து முன்னேற வேண்டும் – சிவகுமார் வலியுறுத்து!!

பத்துகாஜா,செப்8: மாணவர்கள் உட்பட இளம் தலைமுறையினர் தங்களுக்குள் ஒளிந்திருக்கும் சுயத்திறன் அல்லது ஆற்றலை கண்டறிந்து அதன் வாயிலாக தங்களின் நம்பிக்கையான எதிர்காலத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் என பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு வ.சிவகுமார் நினைவுறுத்தினார்.

முன்னேற்றமான மற்றும் நம்பிக்கையான எதிர்காலத்திற்கு கல்வி மட்டுமின்றி தங்களுக்குள்ளான சுயத்திறன்,ஆற்றலும் பெரும் மூலதனமாக அமையும் என்றும் அவர் மேலும் கூறினார்.

பேரா தமிழ் இலக்கிய மேம்பாட்டு சங்கத்தின் ஏற்பாட்டில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் ஆதரவோடு நடைபெற்ற கவியரசு கண்ணதாசன் இலக்கிய விழா மற்றும் சுதந்திர நாள் கவியரங்கிற்கு தலைமையேற்று சிறப்புரை வழங்கிய போது சிவகுமார் இதனை வலியுறுத்தினார்.

ஆரம்பப் பள்ளியிலிருந்து இடைநிலைப்பள்ளிக்குச் செல்லும் மாணவர்களில் இன்னமும் எழுத படிக்கத் தெரியாத மாணவர்கள் இருப்பதை காணும் போது வருத்தமாக இருப்பதாக கூறிய அவர் ஒரு மாணவர் எப்படி இடைநிலைப்பள்ளி வரை எழுதப் படிக்கத் தெரியாமல் போகிறான் என்பது தமக்கு ஆச்சரியமாக இருப்பதாகவும் கூறினார்.

இம்மாதிரியான சூழலில் நாம் யாரை குறைச் சொல்வது? ஆசிரியர்களா,பெற்றோர்களா,சமுதாயமா? எனவும் அவர் கேள்வி எழுப்பிய அவர் இம்மூன்று தரப்பினருமே அதற்கு பொறுப்பேற்க வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காண்பித்தார்.

அதேவேளையில்,ஆசிரியர்களும் பெற்றோர்களும் மாணவர்கள் அல்லது பிள்ளைகளிடையே ஆட்கொண்டிருக்கும் திறனை கண்டறிந்து பயிற்சியும் ஊக்கம் அளித்து அத்துறை சார்ந்து அவர்கள் முன்னேற வழி அமைத்து கொடுக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்டார்.

கவியரசு கண்ணதாசன் எட்டாம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும் காலத்தை வென்று நிற்கும் பல்வேறான படைப்புகளை நமக்காக விட்டுச் சென்றுள்ளார்.ஒரு குழந்தை பிறந்து,வளர்ந்து,இறக்கும் வரை தன் வாழ்வியல் பயணத்திற்கான அத்துணை சூழலையும் மிக அழகாக கண்ணதாசன் தன் பாடல்களில் கொடுத்துள்ளார்.

அவரது கவிதையும் பாடல்களும் நூல்களும் எல்லாத் தலைமுறைக்கும் உகர்ந்த வாழ்வியல் பொக்கிசம் என்றும் கூறிய சிவகுமார் கண்ணதாசன் மறைந்தும் வாழ்ந்து கொண்டிருக்கும் உலக அதிசயம் என்றுரைத்தார் மாண்புமிகு சிவகுமார்.

கண்ணதாசனின் பாடல்களோடு தொடங்கிய இந்நிகழ்ச்சியில் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புரவலர் வழக்கறிஞர் அமுசு விவேகானந்தன், அச்சங்கத்தின் தலைவர் சிவாலெனின் ஆகியோர் வாழ்த்துரையும் வழங்கிய வேளையில் ஏற்பாடு குழுத்தலைவர் கலைஞர் எம்.ஏ.அலி நோக்கவுரையும் வழங்கினார்.

மாணவர்களின் நடனமும் அவ்வப்போது இடம் பெற்ற இந்நிகழ்ச்சியில் மகப்பேறு மருத்துவரும் பேரா மாநிலத் தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் புரவலருமான எழுத்தாளர் டாக்டர் வ.ஜெயபாலன் தலைமையில் நடைபெற்ற கவியரங்கில் சிவாலெனின்,எம்.ஏ.அலி,கவிஞர் வீரப்பன்,கவிஞர் வீ.மா.சண்முகம்,கவிஞர் கே.எல்.நாராயணன் ஆகியோர் கவிதை வாசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles