மலாய் மொழி நாடகப் போட்டி தமிழ்ப்பள்ளி மாணவர்களின் அபாரத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறது – கோபிந்த் சிங் பெருமிதம்

தமிழ்ப்பள்ளி மாணவர்களின் கலைத்திறன்  இலக்கவியல் தொழில் நுட்பத்தின்  வழி மேலும் வலுப்பெறுகிறது என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கூறினார். தனபாலன் சின்னையா கீழ் இயங்கும் Persatuan Seni Pentas India Kuala Lumpur அமைப்பின் தேசிய ரீதியிலான மலாய் நாடகப் போட்டியில் வெற்றி பெற்ற தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ பரிசுகளை எடுத்து வழங்கினார்.

இந்தப் போட்டி கடந்த 18 ஆண்டுகளாக DEWAN BAHASA & PUSTAKAவோடுஇணைந்து நடத்துவதாகவும், கடந்த 18 ஆண்டுகளில் ஒரு முழு அமைச்சர் இந்த நிகழ்வில் கலந்து கொள்வது இதுவே முதல் முறை எனவும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தனபாலன் பெருமிதம் தெரிவித்தார்.

இந்த வருடம் நாட்டிலுள்ள 80 தமிழ்ப்பள்ளில் இருந்து 800-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்குகொண்டனர். இந்தப் போட்டியில் ஜொகூர் மாநில பத்து அன்னாம் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஐயாயிரம் ரிங்கிட் ரொக்கப் பணமும் சுழற்கிண்ணமும் இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ எடுத்து வழங்கினார். வரும் ஆண்டுகளில் இந்தப் போட்டியில் பங்குகொள்ளும் மாணவர்களின் எண்ணிக்கை உயர வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டார்.

பேராக் சிலிம் ரிவர் தமிழ்ப்பள்ளி இரண்டாவது இடமும், ஜாலான் லோபாக் நெகிரி செம்பிலான் தமிழ்ப்பள்ளி மூன்றாவது இடமும், அதே மாநிலத்தைச் சேர்ந்த நீலாய் தமிழ்ப்பள்ளி நான்காவது இடமும், பத்துமலை தமிழ்ப்பள்ளிக்கு ஐந்தாவது இடமும் கிடைத்தது. வெற்றி பெற்ற பள்ளிகளுக்கு ரொக்கப் பணமும், வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

நாட்டையே உலுக்கி வரும், பகடிவதைச் சம்பவங்களுக்கு எச்சரிக்கை தரும் விதமாக, அமைச்சர் முன்னிலையில் அரங்கேறிய ‘BULI’ எனும் நாடகம் வந்தவர்களின் மனதை கலங்க வைத்தது.

இந்த தேசிய ரீதியிலான நிகழ்ச்சி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்களை ஒன்று சேர்த்திருக்கிறது என அமைச்சர் கூறினார். தேசிய கலாச்சாரம் மற்றும் கலைத் துறை, மலேசிய சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சு, மலேசியக் கல்வி அமைச்சு, டேவான் பாஹாசா டான் புஸ்தகா, மற்றும் இந்தப் நிகழ்ச்சியின் முன்னோடி Persatuan Seni Pentas India Kuala Lumpur  அமைப்புக்கும் தனது வாழ்த்துகளை அமைச்சர் பதிவு செய்தார்.

இன்றைய இலக்கவியல் தொழில்நுட்பம் எல்லையற்ற வாய்ப்புகளை வழங்குகிறது. முன்பு, நாடக நிகழ்ச்சிகளை நிகழ்ச்சிக்கு வந்திருந்தோர் மட்டுமே ரசிக்க முடிந்தது. ஆனால் இன்று, YouTube, TikTok, Instagram போன்ற தளங்கள் மூலம் நாடக நிகழ்ச்சிகளையும் பயிற்சிகளையும் பதிவு செய்து, திருத்தம் செய்து, மலேசியாவைத் தாண்டி உலகம் முழுவதும் பகிரலாம். இது நம் மாணவர்கள் தங்கள் திறமைகளை உலகளவில் வெளிப்படுத்திக் கொள்ள நல்ல வாய்ப்பாகும் என அமைச்சர் கூறினார்.

அதற்கும் மேலாக செயற்கை நுண்ணறிவு (AI) மாணவர்களின் படைப்பாற்றல் செயல்முறையில் உதவியாக இருக்க வழி வகுக்கிறது. செயற்கை நுண்ணறிவு-AI, நாடகத் திரைக்கதைக்கான ஊக்கத்தைக் கண்டுபிடிப்பதிலும், உரையாடலின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வதிலும், புதுமையான டிஜிட்டல் காட்சிகளை உருவாக்குவதிலும் உதவும். மேலும், நாடக நடிப்பு, திரைக்கதை எழுதுதல், இயக்குநர் திறன் போன்றவற்றை மேம்படுத்தும் வகையில் டிஜிட்டல் கற்றல் தளங்கள் மற்றும் ஆன்லைன் பாடநெறிகளை பயன்படுத்தி ஆர்வமுள்ளோர் தங்களை மேம்படுத்திக் கொள்ளலாம் என அமைச்சர்  கோபிந்த் சிங் கூறினார்.

பங்கேற்ற அனைத்து பங்கேற்பாளர்களையும் நான் வாழ்த்த விரும்புகிறேன். வெற்றி என்பது வெறும் கோப்பைகள் அல்லது பரிசுகளைச் சார்ந்தது  மட்டுமல்ல, முழு நம்பிக்கையுடன் முன்னேறிச் செல்லவும், முயற்சிக்கவும், உருவாக்கவும், உங்கள் செய்தியைப் பகிர்ந்து கொள்ளவும் உங்கள் தைரியத்தைப் பற்றியது என்பதை நினைவில் கொள்ளுங்கள் என கூறிய அமைச்சர்; நீங்கள் அனைவரும் நமது மொழியையும் கலாச்சாரத்தையும் நிலைநிறுத்தும் இளம் தூதர்கள் எனவும் புகழாரம் சூட்டினார்..

இந்த தமிழ்ப் பள்ளி மலாய் மொழி நாடகப் போட்டி, கலை மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஒருங்கிணைப்பு வழி, தேசிய மொழியை மேம்படுத்துவதற்கும், ஒற்றுமையை வலுப்படுத்துவதற்கும், அறிவு, படைப்பாற்றல் மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை கொண்ட இளம் தலைமுறையை உருவாக்குவதற்கும் ஒரு தளமாகத் தொடரட்டும். என இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ வாழ்த்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles