


ம.இ.கா. பேரா மாநிலத்தின் மூத்த மகளிர் ஒன்றுகூடும் நிகழ்ச்சி சுங்கை சிப்புட் துன் சாமிவேலு மாநாட்டு மையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி, டான் ஸ்ரீ எம். இராமசாமி அவர்களின் தலைமையிலும், ம.இ.கா. பேரா மாநிலமும் மூத்த மகளிர் அணியும் இணைந்து ஏற்பாடு செய்திருந்தன.
இந்த நிகழ்ச்சியின் நோக்கமானது, நீண்டகாலமாக கட்சிக்கும் சமூகத்திற்கும் தங்களது சேவையை வழங்கி வந்த மூத்த மகளிரின் அர்ப்பணிப்பையும் தியாகத்தையும் கௌரவிப்பது ஆகும்.
இந்நிகழ்வில் டான்ஸ்ரீ டத்தோ’ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து திறப்புரை ஆற்றினார். புவான்ஸ்ரீ இந்திரா அவர்களும், முன்னாள் மற்றும் தற்போதைய மகளிர் அணித் தலைவிகளும் இந்நிகழ்வைத் குத்துவிளக்கேற்றி தொடக்கி வைத்தார்கள். மேலும்,மத்திய செயற்குழு உறுப்பினர்கள் (CWC), பேரா மாநில ம.இ.கா. தொடர்புக் குழு நிருவாகத்தினர் மற்றும் தொகுதி தலைவர்களும், அவர்தம் நிருவாகத்தினரும் கலந்து சிறப்பித்தனர். 600க்கும் மேற்பட்ட மூத்த மகளிரின் பங்கேற்பு நிகழ்ச்சியை மேலும் மெருகூட்டியது .
தனது உரையில், டான்ஸ்ரீ எம். இராமசாமி அவர்கள், மூத்த மகளிரின் சேவையை பாராட்டியதுடன், MIED, AIMST பல்கலைக்கழகம் மற்றும் TAFE கல்லூரி வழியாக வழங்கப்படும் கல்வி உதவித் திட்டங்களை
வலியுறுத்தினார்.
மேலும், சுங்கை சிப்புட் நாடாளுமன்ற தொகுதியில் ம.இ.கா. வேட்பாளர்களை ஆதரிக்க அனைவரும் ஒற்றுமையாக இருக்க கேட்டுக் கொண்டார்.
தொடர்ந்து, டான் ஸ்ரீ டத்தோ’ ஸ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் அவர்கள், ம.இ.கா. எப்போதும் சமூகத்திற்காக உழைக்கும் கட்சி என்பதை வலியுறுத்தி, துன் டாக்டர் சாமிவேலு அவர்களின் சமூகப் பணியை தொடரும் தனது உறுதிபாட்டையும் தெரிவித்தார். மேலும், அனைத்து உறுப்பினர்களும் ஒற்றுமையுடன் செயல்பட்டு, கட்சியின் எதிர்கால வெற்றிக்காக பாடுபட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்
இறுதியாக, டான் ஸ்ரீ டத்தோ ஶ்ரீ டாக்டர் எஸ்.ஏ. விக்னேஸ்வரன் மற்றும் டான் ஸ்ரீ எம். இராமசாமி ஆகியோர், நிகழ்வில் பங்கேற்ற அனைத்து மூத்த மகளிருக்கும் நினைவுப் பரிசுகளை வழங்கி கௌரவித்தனர்.

