
ஸ்மார்ட் சிட்டி கே.எல் 2025 கண்காட்சியை அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்த மாண்புமிகு பிரதமர் அன்வார் இப்ராகிமுக்கு, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ நன்றியை பதிவு செய்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ் நடைபெறும் ஸ்மார்ட் சிட்டி கே.எல் 2025 கண்காட்சி, கோலாலம்பூர் மாநாட்டு மையத்தில் நடைபெறுகிறது. இந்த மாநாடு 17 முதல் 18 செப்டம்பர் வரை நடைபெறுகிறது. செயற்கை நுண்ணறிவு துணைகொண்டு உருவாக்கப்படும் நகரங்களை மையமாகக் கொண்டு இந்தக் கண்காட்சியை இலக்கவியல் அமைச்சோடு இணைந்து மலேசிய இலக்கவியல் பொருளாதார கழகமும், தேசிய இலக்கவியல் நிறுவனமும் ஏற்பாடு செய்திருந்தது.
ஆசிய கண்டத்திலேயே, வல்லரசு நாடான சீனாவுக்கு அடுத்தபடியாக மலேசியவுக்கு இந்தத் கண்காட்சியை நடத்தும் வாய்ப்பு கிட்டியிருப்பது பெருமைமிக்கதாகும். ஸ்பேனில் அமைந்துள்ள மாபெரும் செயற்கை நுண்ணறிவு நிறுவனமான பீரா பார்சலோனா (Fira Barcelona) நிறுவனத்தால் உருவான இந்த செயற்கை நுண்ணறிவு நகர மேம்பாட்டுத் திட்டம், மலேசியாவில் நல்லாதரவைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
2030 ஆம் ஆண்டுக்குள் மலேசியா ஒரு செயற்கை நுண்ணறிவு நாடாக-(Ai Nation) மாறத் தயாராகி வரும் நிலையில், மக்களுக்கு சேவை செய்வதற்காக ஸ்மார்ட் நகரங்கள் போன்ற Ai- தொழில்நுட்பத்தை மையப்படுத்திய நகரங்கள் கட்டமைக்கப்பட வேண்டும் என பிரதமர் அன்வார் இப்ராகிம் இன்று தெரிவித்தார். திறன்சார் நகரங்கள் மக்களுகானது. “மக்களுக்காக இது போன்ற நகரங்கள் கட்டமைக்கப்படுவதன் வழி, மக்களின் தனித்த தேவைகளுக்கேற்பவும், நெறிகளுக்குபட்டும் இருப்பது சிறப்பானதாகும் என மேலும் கூறினார்.
வறுமையை நிவர்த்தி செய்வதற்கும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கும் ஆசியான் வட்டார நாடுகளின் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக நகரங்களை, ஸ்மார்ட் சிட்டி- திறன்சார் நகரங்களக உருமாற்றுவதும் அடங்கும். ஒரு ஸ்மார்ட் நகரம் என்பது பண்பாட்டுக்குட்பட்டு சுறுசுறுப்புடனும் தொழில்நுட்ப நுணுக்கத்துடனும் இருக்க வேண்டும் என பிரதமர் அன்வார் தெரிவித்தார்.
“மேம்பட்ட ஆற்றல், நீர், கழிவுகள் மேலாண்மை போன்ற துறைகளில் AI திறன்களைப் பயன்படுத்துவதிலிருந்து, தொழில்நுட்பத்தின் வழி பேரிடர் மேலாண்மையை வலுப்படுத்துவது வரை, ஸ்மார்ட் நகரம் திறன்களை அதிகரிக்கிறது, சுற்றுச்சூழல் பாதிப்பை குறைக்கிறது, மேலும் எதிர்கால சவால்களுக்கு எதிராக நகரங்களை வலுப்படுத்துகிறது,” என்று பிரதமர் கூறினார்.

ஆக பிரதமரின் அவாவுக்குகேற்ப, மலேசியாவின் அனைத்து மாநிலங்களும் தங்களுக்கான ஸ்மார்ட் நகர முயற்சிகளைத் தொடங்கிவிட்டதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தெரிவித்தார். கிள்ளான் பள்ளத்தாக்கைத் தவிர்த்து, போக்குவரத்து, பாதுகாப்பு மற்றும் தூய்மையைப் பேணுதல் தொடர்பான விஷயங்களை கண்காணிக்கும் ஒரு கட்டுப்பாட்டு மையம் பினாங்கு மாநிலத்திலும் இயங்கிக் கொண்டிருப்பதாக அமைச்சர் கோபிந் சிங் டியோ பெருமையுடன் கூறினார்.
இருந்த போதிலும் தற்போது, இது போன்ற முயற்சிகள் தனித்தனியாக இயங்குவதாகவும், இது போன்ற மையங்களை ஒருங்கிணைப்பதோடு, தரவுகளைப் பகிரும் செயல்முறைகளை திறம் படச் செய்வதால், மலேசியா செயற்கை நுண்ணறிவு நாடாக உருமாறும் நோக்கம் நிறைவேறும் என அமைச்சர் உறுதியளித்தார்.
எதிர்காலத்திற்குத் தொடர்ந்து, மாநில மற்றும் உள்ளூர் அரசாங்க நிலைகளில் உள்ள அனைத்து தற்போதைய தீர்வுகளையும் ஒன்றிணைத்து, நாடு முழுவதும் விரிவாக்கக்கூடிய தீர்வுகளாக மாற்றுவது எப்படி என்பதை ஆராய்ந்து வருகிறோம். இது தரவு எவ்வாறு பகிரப்படுகிறது, சேமிக்கப்படுகிறது, மேலும் புதுமையான முறையில் அதிக தீர்வுகளை எவ்வாறு கண்டுபிடிக்கலாம் என்பதையும் உள்ளடக்கியதாக இருக்கும்,” என்று கோபிந்த் தெரிவித்தார்.
Smart City KL Expo கண்காட்சியின் இரண்டாம் நாளில், நான்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் (MoU) கையெழுத்தானது. அதில் டிஜிட்டல் நேஷனல் பெர்ஹாட் (Digital Nasional Berhad) – எரிக்சன் (Ericsson) கூட்டாண்மையும் அடங்கும். இதன் வழி 40,000 அரசு ஊழியர்களை இலக்காகக் கொண்ட 5G, AI மற்றும் IoT பயிற்சி திட்டம் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.