
ஷா ஆலம், செப் 18-
வரும் அக்டோபர் 20ஆம் தேதி கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஜோம் ஷோப்பிங் இலவச பற்றுச் சீட்டுத் திட்டத்தை மாநில அரசு இவ்வாண்டும் அமல்படுத்தியுள்ளது மிகவும் பாராட்டுக்குரியது என்று சிலாங்கூர் மாநில பிபிபி கட்சியின் தலைவர் டாக்டர் சுரேந்திரன் தெரிவித்தார்.
பெருநாள் மகிழ்ச்சியில் வசதி குறைந்தவர்களும் விடுபடக்கூடாது எனும் உயரிய நோக்கில் அமல்படுத்தப்படும் இத்திட்டத்திற்கு மாநில அரசு இவ்வாண்டு 44 லட்சத்து 30 ஆயிரம் வெள்ளியை ஒதுக்கியுள்ளதாக ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பாராய்டு அண்மையில் அறிவித்தார்.
தலா 200 ரிங்கிட் மதிப்புள்ள 22,150 பற்றுச் சீட்டுகள் மாநிலத்திலுள்ள அனைத்து 56 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் விநியோகிக்கபடும்.
இம்மாதம் 20ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 17ஆம் தேதிக்குள் தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு அவை பகிர்ந்தளிக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
இந்த பற்றுச் சீட்டைப் பெற்றவர்கள் சம்பந்தப்பட்ட தொகுதியில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட பேரங்காடிகளில் பெருநாளுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருள்களை வாங்கிக் கொள்ளலாம் .
சிலாங்கூர் மாநில அரசு வழங்கும் இந்த தீபாவளி பற்றுச்சீட்டுகள் கஷ்டப்படும் மக்களுக்கும் வரிய நிலையில் உள்ளவர்களுக்கு சென்றடைவதை சம்பந்தப்பட்ட தரப்பினர் உறுதி படுத்த வேண்டும் என்று டாக்டர் சுரேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
200 வெள்ளி பற்றுச்சீட்டு மூலம் சம்பந்தப்பட்ட குடும்பங்கள் தங்கள் வீட்டிற்கு தேவையான அத்தியாவசியப் பொருட்களை வாங்கி கொள்ளலாம்.
தீபாவளி காலத்தில் இது அவர்களின் சுமையை குறைக்க உதவும் என்பதோடு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தும் என்று டாக்டர் சுரேந்திரன் நம்பிக்கை தெரிவித்தார்.