
கோலாலம்பூர் செப் 28-
நாடு முழுவதும் உள்ள 1,000 இந்து வழிபாட்டுத் தலங்களுக்கு RM20 மில்லியன் அதாவது இரண்டு கோடி வெள்ளி நிதியுதவி வழங்குவதற்காக மடானி அரசாங்கத்தால் தொடங்கப்பட்ட தர்ம மடானி திட்டம், ஒவ்வொரு கோயிலுக்கும் RM20,000 நிதியுதவி அளிக்கும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அணுகுமுறையாகும்.
இந்த திட்டத்தை செயல்படுத்திய பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் மற்றும் இந்த திட்டத்தை முன்வைத்த தொழில்முனைவோர் மற்றும் கூட்டுறவு மேம்பாட்டுத் துணை அமைச்சர் டத்தோஸ்ரீ இரமணன் இராமகிருஷ்ணனுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்தார்.
“முதன்முறையாக, இந்த திட்டம் மித்ராவின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.இது நாடு முழுவதும் உள்ள 1,000 கோயில்களுக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்திய சமூகத்திற்கும் பயனளிக்கிறது.
இந்த நிதியை உள்ளூர் இந்திய சமூகத்திற்கு பயனளிக்கும் சமூக, மத நடவடிக்கைகள் மற்றும் திட்டங்களுக்குப் பயன்படுத்தலாம்” என்று டாக்டர் குணராஜா கூறினார்.
பிகேஆர் மத்திய தலைமைத்துவக் குழுவின் உறுப்பினராகவும் இருக்கும் அவர், தர்ம மடானி திட்டம், கோயில்களால் இயக்கப்படும் சமூக மையங்கள் மூலம், குறிப்பாக பி40 குழுவிற்கு, நலத்திட்ட உதவிகளை வழங்க கோயில்களுக்கு உதவும் என்று கூறினார்.