



சிலிம் ரீவர்,செப் 28- பேரா மாநிலத் தமிழ்ப்பள்ளிகளின் வளர்ச்சியிலும் மேம்பாட்டிலும் ஆக்கப்பூர்வமான சேவையையும் பங்களிப்பையும் மாண்புமிகு அ.சிவநேசன் நனிச் சிறப்பாக வழங்கி வருவதாக தஞ்சோங் மாலிம் ஊராட்சி மன்ற உறுப்பினர் சிவாலெனின் குறிப்பிட்டார்.
தமிழ்ப்பள்ளி மாணவர்களின் நலனை ஒவ்வொரு நிலையிலும் கண்காணித்து வரும் மாநில மனிதவளம்,சுகாதாரம்,ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினருமான சிவநேசன் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் எல்லா நிலையிலும் சிறந்து விளங்க வேண்டும் என்பதையே இலக்காக கொண்டும் செயல்படுவதாக சிவாலெனின் தெரிவித்தார்.
குளூனி தோட்டம் மற்றம் சிலிம் வில்லேஜ் ஆகிய இருப்பள்ளிகளும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த விளையாட்டு போட்டியை சுங்கை சட்டமன்ற உறுப்பினருமான சிவநேசனின் பிரதிநிதியாக கலந்து அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைக்கையில் சிவாலெனின் இவ்வாறு குறிப்பிட்டார்.
மேலும்,பேரா மாநிலத்திலுள்ள தமிழ்ப்பள்ளிகளுக்கு அப்பள்ளிகளின் தேவைகளுக்கு ஒப்பவும் எதிர்பார்ப்பிற்கு ஏற்பவும் சிவநேசனின் பங்களிப்பும் ஆதரவும் நிறைவாகவே உள்ளது என்பதையும் சுட்டிக்காண்பித்த அவர் மாணவர்களின் கல்வி மேம்பாட்டில் ஆசிரியர்களும் தலைமையாசிரியர்களும் பெரும் அக்கறை செலுத்த வேண்டும் என்பதும் மற்ற மொழி பள்ளிகளைக் காட்டிலும் கல்வி,விளையாட்டு,புறப்பாட நடவடிக்கைகள் உட்பட அனைத்து நிலையிலும் தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனை பெருமிதமாக இருக்க வேண்டும் என்பதுமே மாண்புமிகு சிவநேசனின் பெரும் எதிர்பார்ப்பு என்பதையும் சுட்டிக் காண்பித்தார்.
இதற்கிடையில்,இவ்விரு பள்ளிகளும் இணைந்து ஏற்பாடு செய்த இவ்விளையாட்டு போட்டிக்காக வெ.7,500ஐ சிவநேசன் மானியமாக வழங்குவதாகவும் சிவாலெனின் அறிவித்தார்.
மேலும்,தமிழ்ப்பள்ளியில் கல்வியிலும் விளையாட்டிலும் திறன் மிக்க மாணவர்களாக இருப்பவர்கள் இடைநிலைப்பள்ளிகளிலும் தங்களின் திறனை மேம்படுத்தி அத்துறையில் சிறக்க வேண்டும் எனவும் கேட்டு கொண்ட சிவாலெனின் விளையாட்டு போட்டி நனிச் சிறப்பாக நடந்தேறிட வாழ்த்தும் தெரிவித்தார்.
முன்னதாக தலைமையுரை ஆற்றிய குளூனி தோட்டத் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியர் திரு.தேவதாஸ் குறைந்த மாணவர்கள் கொண்ட இவ்விரு பள்ளியிலும் விளையாட்டு போடியை இணைந்து நடத்துவதை மாவட்ட கல்வி இலாகா உட்பட அனைத்து தரப்பினரும் வரவேற்றதாக கூறினார்.
மேலும்,விளையாட்டு போட்டிக்கு மானியம் வழங்கி இவ்விரு பள்ளிகளின் நோக்கம் அதன் இலக்கை எட்ட உதவிய மாண்புமிகு அ.சிவநேசனுக்கும் நன்றியை தெரிவித்து கொண்டார்.
இவ்விரு பள்ளி மாணவர்களும் விளையாட்டு போட்டியில் தங்களின் திறனை வெளிப்படுத்திய வேளையில் ஆசிரியர்கள்,பெற்றோர் ஆசிரியர் சங்கம்,வாரியக்குழு,முன்னாள் மாணவர்கள் என அனைத்து தரப்பினரும் தங்களின் ஆதரவையும் ஒத்துழைப்பையும் நிறைவாக வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.