
கோலாலம்பூர், செப் 30 –
மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள், மலேசிய மாடாணி அரசாங்கம் தீபாவளி திருநாளுக்காக தற்போதைய ஒரு நாள் பொது விடுமுறையுடன் கூடுதலாக மேலும் ஒரு நாள் விடுமுறை அறிவிக்குமாறு அன்புடன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மலேசியா பல்வேறு இனங்களும் மதங்களும் இணைந்து வாழும் அழகிய நாடு.
இங்கே வாழும் இந்து சமூகம், தலைமுறை தோறும் கடைப்பிடித்து வரும் பாரம்பரியத்தில் தீபாவளி ஒரு முக்கியமான திருநாளாகக் கருதப்படுகிறது.
ஒளி இருளை வெல்லும் அடையாளமாகக் கொண்டாடப்படும் இந்த புனித நாள், ஆன்மிகத்தையும் குடும்ப பந்தங்களையும் வலுப்படுத்தும் சிறப்பு வாய்ந்த விழாவாகும்.
தற்போது மாடாணி அரசாங்கம் வழங்கும் ஒரு நாள் பொது விடுமுறை, நாட்டின் பெரும்பாலான இந்து குடும்பங்களுக்கு போதுமானதாக இல்லை.
தீபாவளியின் போது எண்ணெய் குளியல், வீட்டுத் தூய்மை, தீபம் ஏற்றுதல் போன்ற பாரம்பரிய நிகழ்ச்சிகளுக்காக பெரும் நேரம் ஒதுக்க வேண்டியிருக்கிறது.
அதற்கு பிறகு தீபாவளி நாளில் கோயில் வழிபாடு, உறவினர் சந்திப்பு, சமூக கொண்டாட்டம் ஆகியவை நடைபெறுகின்றன.
பலர் தொலைதூர மாநிலங்களில் வசிக்கும் குடும்பத்தினருடன் சந்திக்கவும், நீண்ட பயணம் மேற்கொள்ளவும் வேண்டியதால், ஒரு நாள் மட்டும் போதாது என்பதே மலேசிய இந்து சங்கத்தின் கருத்தாகும்.
மேலும், மலேசியாவின் பிற முக்கிய பண்டிகைகளில் பல தினங்கள் பொது விடுமுறை வழங்கப்படும் நடைமுறையை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடும் மலேசிய இந்து சங்கம், “மத நல்லிணக்கம், கலாச்சார அங்கீகாரம் மற்றும் தேசிய ஒற்றுமையை வலுப்படுத்தும் வகையில் இந்த கோரிக்கை நியாயமானது” என்று வலியுறுத்துகிறது.
இதனால், தீபாவளிக்கு கூடுதல் ஒரு நாள் விடுமுறை வழங்கப்பட்டாள், குடும்ப ஒன்று சேர்க்கை, மத வழிபாடு, சமூக சேவை போன்ற நிகழ்ச்சிகளை அமைதியாகவும் மகிழ்ச்சியுடனும் மேற்கொள்ள மலேசிய இந்து சமூகத்திற்கு பெரும் ஆதரவாக இருக்கும்.
மலேசிய மாடாணி அரசாங்கம் இந்த கோரிக்கையை பரிசீலித்து, நாட்டின் பல்துறை சமூக ஒற்றுமையையும், மத சுதந்திரத்திற்கான அரசியலமைப்பு உத்தரவாதத்தையும் உறுதிப்படுத்தும் விதமாக விரைவான நடவடிக்கை எடுப்பார்கள் என மலேசிய இந்து சங்க தேசியத் தலைவர் ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் அவர்கள் உறுதியாக நம்புகிறார்.