


கோலாலம்பூர் செப் 30-
Kl Tower எனப்படும் கோலாலம்பூர் கோபுரத்திற்கான வரவேற்பு சுவற்றில் தற்பொழுது தமிழ் மொழியுடன் போர்னியோ மண்டலத்து மொழிகளும் இடம் பெற்றுள்ளன.
இதன் மூலம் 24 மொழிகள் மொழிகளில் இங்கு வருகின்றவர்களுக்கு தற்பொழுது வாழ்த்தும் வரவேற்பும் தெரிவிக்கப் படுகின்றன.
கோலாலம்பூர் கோபுர வரவேற்பு சுவற்றில் தமிழ் மொழி விடுபட்டுள்ளது குறித்து இந்திய சமுதாயத்திலும் தமிழ் ஊடகத்திலும் அதிருப்தியும் வருத்தமும் தெரிவிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தொடர்பு துறை துணை அமைச்சர் தியோ நி சிங் இன்று காலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இந்த சிக்கல் தொடர்பில் கோலாலம்பூர் கோபுர நிர்வாகக் குழுவினரிடம் தொடர்பு கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொண்டதன் தொடர்பில் இப்பொழுது தமிழ் மொழியும் இந்த வரவேற்பு சுவற்றில் இடம் பெற்றுள்ளது.
இது தவிர சபா-சரவாக் மாநிலங்களின் பாரம்பரிய மொழிகளான ஈபான் கடாசான் மொழிகளும் இணைக்கப்பட்டு வேற்றுமையில் ஒற்றுமை நாட்டும் மலேசியத் தன்மை நிலைநாட்டப்பட்டுள்ளதாக தியோ நிக் சிங் தெரிவித்தார்.
பல்வேறு மொழிகள் இடம் பெறுவதன் தொடர்பில் செப்டம்பர் 11ஆம் நாள் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் அது நேற்றைய முன் தினம் செப்டம்பர் 28 நாள் நடைமுறைக்கு வந்ததாகவும் அதை இப்பொழுது நாம் அனைவரும் காண்கின்றோம் என்று கோலாலம்பூர் கோபுர தகவல் சுவற்றின் அருகில் இன்று காலையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின்போது அவர் தெரிவித்தார்.
தீபாவளி பண்டிகை நெருங்கி வருகின்ற நேரத்தில் கோலாலம்பூர் கோபுர வரவேற்பு சுவற்றில் தமிழும் இடம்பெற்று இருப்பது குறிப்பிடத்தக்க அம்சம் என்றும் குறிப்பாக தமிழை தாய் மொழியாகக் கொண்ட மலேசியர்கள் இடையே இது மிகுந்த வரவேற்பை ஏற்படுத்தி இருப்பதுடன் தீபாவளி குதூகலத்தின் ஓர் அம்சமாகவும் இது மாறி உள்ளதாக கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் கணபதி ராவ் தெரிவித்தார்.
“மலேசிய ஒற்றுமை அரசாங்கம் அனைத்து இனங்களுக்கும் மொழிகளுக்கும் முன்னுரிமை அளிக்கின்ற மடாணி முழக்கத்தின் வெளிப்பாடாகவும் இது அமைந்துள்ளது”.
கோலாலம்பூர் கோபுர நிர்வாகமும் நிலைமையை புரிந்துகொண்டு இந்தியர்களின் உணர்வுக்கு குறிப்பாக தமிழர்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்த மாற்றத்தை உடனடியாக செய்துள்ளதற்கு பாராட்டு தெரிவிப்பதாகவும் குறிப்பாக தற்போதைய புதிய நிர்வாகம் கடந்த ஏப்ரல் மாதத்தில்தான் பொறுப்பேற்றுக் கொண்டது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது என்று அவர் சொன்னார்.