
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர், அக்1-
நாட்டின் பாரம்பரிய தலைநகரமான கோலாலம்பூரில் இந்தியர்களின் பாரம்பரிய வர்த்தக தளமாக விளங்கும் லெபோ அம்பாங் வர்த்தக சங்கத்தின் 16ஆவது ஆண்டு தீபாவளி விழா வரும் அக்டோபர் 11 ஆம் தேதி சனிக்கிழமை மிகவும் விமரிசையாக நடைபெறுகிறது.
அக்டோபர் 11 -ஆம் நாள் சனிக்கிழமை பகல் 2:00 மணி முதல் நள்ளிரவு வரை லெபோ அம்பாங்கில் இந்த தீபாவளி கலை விழா நடைபெற உள்ளது.
இதன் தொடர்பில் இன்று மாலையில் நடைபெற்ற செய்தியாளர்க் கூட்டத்தில், லெபோ அம்பாங் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் பொருளாளர் லோகநாதன் கூறுகையில் விலாயா மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹா முஸ்தபா மற்றும் ம இகா தேசிய துணை தலைவர் டத்தோஸ்ரீ எம் சரவணன் ஆகியோர் முக்கிய பிரமுகர்களாக கலந்து கொள்வது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்த விழாவில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கலந்து கொள்ள அழைக்கப் பட்டிருக்கும்விரைவில் நல்ல பதில் கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம் என்று அவர் சொன்னார்.
16 ஆவது ஆண்டாக நடைபெறும் இந்த விழாவில் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்று அசத்தவுள்ளனர் என்று லேபோ அம்பாங் இந்தியர் பாரம்பரிய வர்த்தக சங்கத்தின் செயலாளர் இராஜன் தெரிவித்தார்.
பொதுமக்களுக்கு தீபாவளி அன்பளிப்புகள் வழங்கப்படும் இந்த நிகழ்வில் தமிழ்ப் பள்ளிகளைச் சேர்ந்த 25 மாணவர்களுக்கு அன்பளிப்பும் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.
லேபோ அம்பாங் 100 ஆண்டுகளுக்கு மேலாக இந்தியர்களின் பாரம்பரிய தளமாக விளங்குகிறது.
இங்கு மொத்தம் 47 கடைகள் உள்ளன. அனைத்தும் இந்தியர்களின் கடைகளாகும்.
இந்தியர்களின் பாரம்பரியத்தை நிலை நிறுத்துவதற்கு ஏதுவாக லேபோ அம்பாங்கை மேம்படுத்த வேண்டும் என்று விலாயா அமைச்சரை கேட்டுக் கொள்வோம் என்று அவர் சொன்னார்.
முற்றிலும் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் இந்த கலை விழாவை நாட்டில் புகழ்பெற்ற கலைஞர் கவிமாறன் வழி நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.