
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் அக் 1-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் டிபிகேஎல் அமைத்த தீபாவளி கடைகள் இன்று காற்றில் பறந்தன.
கனமழையுடன் வீசிய பலத்த காற்றை தொடர்ந்து பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் போடப்பட்டிருநத தீபாவளி கடைகள் அனைத்தும் காற்றில் பறந்தால் வியாபாரிகள் பெரும் அதிர்ச்சியை அடைந்தனர்.
தீபாவளியை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தின் பிரதான சாலையில் பிரத்தியேக கடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு கூடாரங்கள் போடப்பட்டுள்ளன.
இக்கடைகளால் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் மக்கள் இங்கு வரமாட்டார்கள்.
வர்த்தகம் பெரிதும் பாதிக்கும் மற்றும் இந்த கடைகள் காற்றில் பறந்து செல்லும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் நேற்று தனது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் இன்று தலைநகரின் பல பகுதிகளில் காலை முதல் கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியது.
இதனால் அங்கு போடப்பட்டிருந்த கடைகள் காற்றில் பறந்தன. கூடாரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டிபிகேஎல் அதிகாரிகள் அக்கூடாரங்களை அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
டிபிகேஎல் அமைத்த இந்த தீபாவளி கடைகள் மழைக்காலத்தில் தாக்கு பிடிக்காது.
அப்படி இருக்கையில் எப்படி இந்த கடைகளை டிபிகேஎல் அமைத்தது என்று வியாபாரிகள் கேள்வி எழுப்பினர்.