



ஈப்போ, அக். 2: ஐபிஎப் கட்சி தொடர்ந்து தேசிய முன்னணிக்கு முழுமையான ஆதரவை வழங்கும். இக்கட்சியின் தோற்றுனர் டான்ஸ்ரீ எம்.ஜி. பண்டிதன் இக்கட்சி தேசிய முன்னணியில் உறுப்பினராகி தொடர்ந்து வற்றாத ஆதரவு வழங்க வேண்டும் என்பது அவருடைய உன்னத நோக்கம் என்று இங்குள்ள அம்னோ கட்டடத்தில் நடைபெற்ற பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் ஆண்டுக்கூட்டத்தை தொடக்கி வைத்தபோது ஐபிஎப் கட்சியின் தேசியத் தலைவர் டத்தோ தி.லோகநாதன் கூறினார்.
அவரைத் தொடர்ந்து புவான் ஸ்ரீ மற்றும் டத்தோ சம்பந்தன் ஐபிஎப் கட்சியின் தலைவராக இருந்தபோதும் இதே சித்தாந்தை கடைபிடித்து வந்தனர். அவர்களை தொடர்ந்து நானும் இந்த கூற்றை பின்பற்றி வருகிறேன். ஆகையால், தேசிய முன்னணிக்கு ஐபிஎப் கட்சியின் முழுமையான ஆதரவு என்றென்றும் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
தற்போது தேசிய முன்னணியுடன் உறுப்பினராகி வற்றாத ஆதரவை வழங்க ஐபிஎப் கட்சி முற்பட்டுள்ளது. இதன் வாயிலாக எதிர்வரும் பொதுத்தேர்தலில் ஐபிஎப் கட்சிக்கு நல்லதொரு வாய்ப்பாக இருக்கும். இதன் வாயிலாக ஐபிஎப் உறுப்பினர்களின் எதிர்காலமும் தலையெழுத்தும் சிறப்பாக அமைந்தால் இக்கட்சிக்கு நன்மையே என்று அவர் கருத்துரைத்தார்.
பேராக் மாநிலத்தில் ஐபிஎப் கட்சியை சேர்ந்த தலைமைத்துவம் மற்றும் உறுப்பினர்களுக்கு முன்னுரிமையும் முக்கியதுவமும் வழங்கப்பட வேண்டும். தேர்தல் காலங்களில் மட்டும் ஐபிஎப் தொண்டர்களின் சேவையை மற்றும் உழைப்பை பயன்படுத்தி பின் அவர்களை ஓரங்கட்டுவது ஏற்புடையதல்ல. இவ்விவகாரத்தில் இனிவரும் காலங்களில் பேராக் மாநில அரசு ஐபிஎப் கட்சியின் உறுப்பினர்களின் தேவையை மற்றும் அவசியத்தை புரிந்து செயல்பட வேண்டும் என்று பேராக் மாநில ஐபிஎப் கட்சியின் தலைவர் மாணிக்கம் கூறினார்.
இன்னும் ஒரு மாதத்தில் தீபாவளி பண்டிகை வரவுள்ளது. இந்த காலகட்டத்தில் ஐபிஎப் கட்சியின் பி40 குடும்பத்தாருக்கு உதவிகள் வழங்கப்பட்டு வரும். இவ்வாண்டும் அவர்களுக்கு உதவிகள் வழங்க ஏற்பாடு செய்யப்படும். ஆகவே, இவ்விவகாரத்தில் பேராக் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரனி முகமட் ஐபிஎப் கட்சியினருக்கு உதவிகள் வழங்க முன்வர வேண்டும் என்று அவர் கோரிக்கை மனு வைத்தார்.
அதுமட்டுமின்றி, பேராக் மாநில அரசாங்கத்தில் இருக்கும் பதவிகள் மற்றும் வேலை வாய்ப்புகளை வழங்க முன்வர வேண்டும். குறிப்பாக, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள், கிராமத்து தலைவர்கள், ஜிஎல்சி துறைகளில் இடம்பெற வாய்ப்புகள் வழங்கினால் ஐபிஎப் என்றென்றும் நன்றி கூற கடமைப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
இந்நிகழ்வில், பேராக் மாநில மந்திரி பெசாரின் சிறப்பு செயலாளர் பிரமுகராக கலந்துக்கொண்டார். பேராக் மாநில ஐபிஎப் தொகுதித்தலைவர்கள், கிளைத்தலைவர்கள் மற்றும் மகளிர்கள் கலந்து சிறப்பித்தனர்.