

மா.பவளச்செல்வம்
கோலாலம்பூர் அக் 2-
பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியாவில் தீபாவளியை முன்னிட்டு அமைக்கப்பட்ட நீலநிற கடைகள் முற்றாக அகற்றப்படும்.
அதற்கு பதிலாக வெள்ளை நிறத்திலான மக்கி டேங் கூடார கடைகள் அமைக்கப்படும் என்று விலாயா மாநில அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சலேஹாவின் சிறப்பு பணி அதிகாரி சிவமலர் தெரிவித்தார்..
பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா தீபாவளி கடை விவகாரம் தொடர்பில் சிவமலர் இன்று பிரிக்பீல்ட்ஸ் வந்து நிலவரத்தை நேரில் கேட்டறிந்தார்.
தீபாவளியை முன்னிட்டு இரண்டு வாரங்களுக்கு மேல் வியாபாரிகள் வியாபாரம் செய்ய கோலாலம்பூர் மாநகர் மன்றம் நீல நிறத்திலான கடைகளை அமைத்து கொடுத்துள்ளது.
சாலையின் ஒரு பகுதி மூடப்பட்டு அங்கு இந்த கடைகள் போடப்பட்டுள்ளன.
இக்கடைகளால் பிரிக்பீல்ட்ஸ் வட்டாரத்தில் பெரும் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனால் மக்கள் இங்கு வரமாட்டார்கள் என்று வியாபாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
இந்த கடைகளால் வர்த்தகம் பெரிதும் பாதிக்கும் மற்றும் பலத்த காற்று வீசினால் இந்த கடைகள் காற்றில் பறந்து செல்லும் என மஇகா துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எம். சரவணன் தனது கண்டனத்தை வெளிப்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் நேற்று காலை கனமழையுடன் கூடிய பலத்த காற்று வீசியபோது இந்த கடைகள் காற்றில் பறந்தன.
கூடாரங்கள் சாலையில் விழுந்ததால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து டிபிகேஎல் அதிகாரிகள் அக்கூடாரங்களை அப்புறப்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று வருகை தந்த சிவமலர் இந்த நீலநிற கடைகளை அகற்றும்படி டி.பி.கே.எல். அதிகாரிகளை கேட்டுக் கொண்டார்.
இந்த கடைகளுக்கு பதிலாக வெள்ளை நிறத்திலான மக்கி டேங் கூடாரங்களை இரண்டு தினங்களுக்குள் அமைக்கப்படும்.
இவ்வாண்டு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பிரிக்பீல்ட்ஸ் லிட்டில் இந்தியா வட்டாரத்தில் 108 கடைகளுக்கு 284 பேர் விண்ணப்பம் செய்தனர்.
தேர்வு செய்யப்பட்ட 108 பேருக்கு தீபாவளி கடைகள் குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டது.
இங்கு காலங்காலமாக வியாபாரம் செய்து வருவதாக கூறும் 27 வியாபாரிகள் துன் சம்பந்தன் வளாகத்தின் பின்புறம் அஜெண்டா சூரிய ஏற்பாட்டில் நடக்கும் தீபாவளி சந்தை கடையில் வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கினோம்.
ஆனால் அதை அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.
Jalan chana Tong சாலையோரத்தில் வியாபாரம் செய்ய வாய்ப்பு வழங்கினோம். அதையும் ஏற்றுக் கொள்ளவில்லை.
குலுக்கல் முறையில் தேர்வு செய்யப்பட்டவர்களின் கடைகளை வழங்க வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள்.
மற்றவர்களுக்கு வழங்கப்பட்ட கடைகளை எப்படி கொடுக்க முடியும் என்று சிவமலர் கூறினார்.