
மலேசிய இந்து சங்கம், பாலஸ்தீனில் சமாதானம் மற்றும் மனிதாபிமான சேவைக்காக பயணம் செய்த 23 தன்னார்வலர்கள் கைதாகிய செய்தி குறித்து தீவிரமான கவலையை வெளிப்படுத்துகிறது என்று அதன் தேசிய தலைவர், ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன் தெரிவித்தார்.
இந்த தன்னார்வலர்கள் எந்த வித சட்டவிரோதச் செயல்களிலும் ஈடுபடவில்லை. அவர்கள் மனிதாபிமான பணிக்காக, மக்களுக்கு உணவு, மருந்து மற்றும் உதவிகளை வழங்குவதற்காக மட்டும் சென்றிருந்தனர். இப்படிப்பட்ட அர்ப்பணிப்புடன் பணியாற்றியவர்களை கைதுசெய்திருப்பது மிகுந்த மனக்கசப்பை ஏற்படுத்துகிறது.
மலேசிய இந்து சங்கம், சர்வதேச மனித உரிமை விதிமுறைகளை மதித்து, கைதாகியுள்ள அனைத்து 23 தன்னார்வலர்களையும் உடனடியாகவும், நிபந்தனை இல்லாமலும் விடுவிக்க பாலஸ்தீன் அதிகாரிகளையும், சம்பந்தப்பட்ட சர்வதேச அமைப்புகளையும் வலியுறுத்துகிறது.
அதே நேரத்தில், மலேசிய அரசும், வெளிநாட்டு அமைச்சகமும், இக்கருத்தை தீவிரமாக எடுத்துக்கொண்டு, தன்னார்வலர்களின் பாதுகாப்பையும், உடனடி விடுதலையையும் உறுதி செய்ய வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுகிறோம். இந்நிகழ்வினால் பாதிக்கப்பட்ட தன்னார்வலர்களின் குடும்பங்களுக்கு ஏற்பட்டுள்ள துயரம் மற்றும் அச்சம் எங்களால் உணரப்படுகிறது. அவர்களுக்கு எங்களின் முழு ஆதரவும் ஒற்றுமையும் உண்டு. இது இன, மத, அரசியல் சார்ந்த பிரச்சினை அல்ல; மனித நேயம் சார்ந்த பிரச்சினை. எனவே, அனைத்து மலேசியர்களும் ஒருமித்து, இந்த 23 பேரின் விடுதலையை கோர வேண்டும்.
மலேசிய இந்து சங்கம், உலகளாவிய மனிதாபிமான பணியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, மனித நேயம் மற்றும் நீதியின் பேரில், பாலஸ்தீனில் கைதாகியுள்ள 23 மலேசிய தன்னார்வலர்களை உடனடியாகவும், பாதுகாப்பாகவும் விடுவிக்க வேண்டும் எனத் தீவிரமாகக் கோருகிறது.
என்றும் இறைச் சேவையில்,
ஸ்ரீ காசி சங்கபூஷன் தங்க கணேசன்
தேசிய தலைவர்,
மலேசிய இந்து சங்கம்
04.10.2025