


கோலாலம்பூர் அக் 31-
மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் குற்றச்செயல்கள் மற்றும் கட்டொழுங்கு சிக்கல்களுக்கு தீர்வு காண அனைத்து பள்ளிகளிலும் மறையாசான் திருவள்ளுவர் அருளிய உலகப் பொதுமறையான திருக்குறளை போதிக்க வேண்டும் என அண்மையில் நாடாளுமன்றத்தில் வலியுறுத்திய, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர்.எஸ்.என் ராயர் அவர்களின் கூற்றை உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் வரவேற்பதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்தார்.
ஒரு மாந்தன் வாழ்வியலின் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் நெறிப்படுத்தி நிலைத்து நிற்கும் நீதிநூலான திருக்குறளை சிறு வயது முதல் படித்து புரிந்து வளர்த்தெடுக்கப்படும் மாணவர்கள் ஒருபோதும் சோரம் போய் விட மாட்டார்கள் என்றார்.
சமீபத்தில் பள்ளிகளில் அரங்கேறும் வன்முறை, கொலை, தற்கொலை, கூட்டு பாலியல் வன்கொடுமைகள் போன்ற எண்ணற்ற குற்றச் செயல்கள், ஒழுங்கீனச் செயல்கள், பண்பற்றச் செயல்கள் அரங்கேறும் போது மனதை உருக்கும் வேதனையாகிறது.
ஆகையால் ஆரம்பத்திலிருந்து இவைகளை களை எடுக்க, எல்லா வகையிலும் துணை நிற்கும் அறநூலான திருக்குறளை பயிற்றுவித்து, மாண்புமிக்க மாணவர்களை உருவாக்க திருக்குறளை முன்மொழிந்த, ஜெலுத்தோங் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு ஆர்.எஸ்.என் ராயர் அவர்களின் கருத்துக்கிணங்க திருக்குறள் மெய்ப்பொருள் அறியும் பாடத்திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டுமென உலகத் தமிழர் பாதுகாப்பு செயலகம் கேட்டுக் கொள்வதாக அதன் ஒருங்கிணைப்பாளர் பாலமுருகன் வீராசாமி தெரிவித்துக் கொண்டார்.

