
வரும் 16ஆவது பொதுத் தேர்தலில் பிபிபி 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 12 சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிட திட்டமிட்டிருப்பதாக இக்கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா மோகன் தெரிவித்தார்.
புதிய உறுப்பினர்களைச் சேர்த்து பிபிபி நாடு முழுமையும் தற்போது லட்சத்து 30 ஆயிரம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டுள்ளது.
கட்சியின் கொள்கை மற்றும் செயல்பாடுகள் மீது மக்கள் கொண்டுள்ள நம்பிக்கையையே இது காட்டுகிறது. அதே சமயம், புதிதாக 20 விழுக்காட்டினர் பிபிபியில் இணைந்திருப்பது கட்சிக்கு மேலும் வலு சேர்த்திருக்கிறது என்று இங்குள்ள பிபிபி தலைமையக வளாகத்தில் நடைபெற்ற தீபாவளி பொது உபசரிப்பு நிகழ்ச்சியின்போது செய்தியாளர்களிடம் பேசினார்.
“மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாங்கள் பாடுபட்டு வருகிறோம். எங்கள் சேவைகள் இன்னும் அதிகமானோரைச் சென்றடைய வேண்டும். இந்நோக்கத்திற்காக எதிர்வரும் பொதுத் தேர்தலில் 8 நாடாளுமன்ற தொகுதிகள் மற்றும் 12 சட்டமன்ற தொகுதிகளில் நாங்கள் களம் இறங்கத் திட்டமிட்டுள்ளோம் “ என்று லோகபாலா விவரித்தார்.

